சீமான் - ரஜினி முகநூல்
தமிழ்நாடு

ரஜினியை கடுமையாக விமர்சித்து வந்த சீமான்.. திடீரென நேரில் சந்திக்க காரணம் என்ன?

சில ஆண்டுகளுக்கு முன்பு ரஜினியை கடுமையாக விமர்சித்து வந்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தற்போது அவரை நேரில் சந்தித்து உரையாடியுள்ளார். இந்த சந்திப்பின் பின்னணி என்ன? சந்திப்பில் பேசப்பட்டது என்ன என்பதை தற்போது காணலாம்.

PT WEB

செய்தியாளர்: முருகேசன்

சில ஆண்டுகளுக்கு முன்பு ரஜினியை கடுமையாக விமர்சித்து வந்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தற்போது அவரை நேரில் சந்தித்து உரையாடியுள்ளார். இந்த சந்திப்பின் பின்னணி என்ன? சந்திப்பில் பேசப்பட்டது என்ன என்பதை தற்போது காணலாம்.

கடந்த 2021 தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்னர், அரசியல் வருகைக்காக ஆயத்த பணிகளை நடிகர் ரஜினிகாந்த் மேற்கொண்டார். அப்போது, தமிழ்நாட்டை ஒரு தமிழனே ஆள வேண்டுமென எதிர்ப்புக்குரல் எழுப்பிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ரஜினியை விமர்சிக்கவும் செய்தார்.

சீமான் - ரஜினி

இதனால், இருதரப்பினருக்கும் கருத்து வேறுபாடு நிலவியது. சமூக வலைதளங்களிலும் நாம் தமிழர் கட்சியினரும், ரஜினி ரசிகர்களும் ஒருவரை மாற்றி ஒருவர் விமர்சித்துக்கொண்டனர். இப்படியான சூழலில்தான், சீமானை சந்திக்க விரும்பியிருக்கிறார் ரஜினிகாந்த்.

காரணம், சீமானின் எக்ஸ் தள பதிவு. வேட்டையன் படத்தை பார்த்த சீமான், “தம்முடைய கவர்ந்திழுக்கும் நடிப்பாற்றல் மூலம் ஆரம்பகால ரஜினியாக நம் மனதை ஆட்கொள்கிறார்” என ரஜினிகாந்தை பாராட்டியிருந்தார்.

பதிவை கண்ட ரஜினி, சீமானை தொடர்பு கொண்டு நன்றி தெரிவித்ததுடன், நேரில் பேச விருப்பமும் தெரிவித்திருக்கிறார் ரஜினி. இதையொட்டி கடந்த 8 ஆம் தேதி சீமானின் பிறந்தநாளான்று அவரை சந்தித்து வாழ்த்து தெரிவிக்க ரஜினி விரும்பியிருக்கிறார். ஆனால் கூலி படப்பிடிப்பில் ரஜினியும், கட்சி நிகழ்ச்சிகளில் சீமானும் பங்கேற்றிருந்ததாலும் அன்றைய தினம் சந்திப்பு சாத்தியமாகவில்லை. இந்த சூழலிதான், ரஜினியை அவரது இல்லத்திற்கே சென்று நேற்று சந்தித்திருக்கிறார் சீமான்.

சீமான் - ரஜினி

1 மணி நேரத்திற்கு மேலாக இந்த சந்திப்பு நீடித்திருக்கிறது. அப்போது ரஜினியும், சீமானும், மனம் விட்டு பல்வேறு விஷயங்களை பேசியுள்ளதாக தெரிகிறது. குறிப்பாக, திமுக ஆட்சி, விஜயின் மாநாடு, 2026 சட்டப்பேரவை தேர்தல் என பல்வேறு அரசியல் நிகழ்வுகள் பேசப்பட்டதாக கூறப்படுகிறது.