தமிழ்நாடு

20 ஆண்டுகளாக சிறையிருக்கும் இஸ்லாமியர்களை மதத்தினால் விடுதலை செய்யாமல் இருப்பதா?: சீமான்

20 ஆண்டுகளாக சிறையிருக்கும் இஸ்லாமியர்களை மதத்தினால் விடுதலை செய்யாமல் இருப்பதா?: சீமான்

sharpana

”20 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் வாடும் இசுலாமிய சிறைவாசிகளை மதத்தினைக் காரணமாகக் காட்டி விடுதலை செய்ய மறுப்பதா?” என்று கேள்வியெழுப்பியுள்ளார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். அவர், வெளியிட்டுள்ள அறிக்கையில்,

”20 ஆண்டுகளுக்கும் மேலாகக் கொடுஞ் சிறைவாசம் அனுபவித்து வரும் இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய முடியாது எனக் கூறி திமுக அரசு அரசாணை வெளியிட்டிருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. தமிழகச் சிறைகளில், இஸ்லாமியர்களை எவ்வித விசாரணையுமின்றி, சந்தேகத்தின் அடிப்படையில் மட்டுமே நீண்ட நெடுங்காலமாக அடைத்து வைத்திருப்பது பெருந்துயரென்றால், மறுபுறம், சட்டத்தின்படி இருக்கும் தார்மீக வாய்ப்புகளை முற்றாக மறுத்து, 20, 25 ஆண்டுகளென தனது வாழ்நாளின் பெரும்பகுதியை சிறையிலேயே கழித்து வரும் இசுலாமியத்தண்டனை சிறைவாசிகளை விடுதலை செய்ய விடாப்பிடியாய் மறுத்து வதைத்து வருவது வரலாற்றுப் பெருங்கொடுமையாகும்.

முன்னாள் முதல்வர் ஐயா கருணாநிதி அவர்களது ஆட்சிக்காலத்தில், கடந்த 2008 ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு பத்தாண்டுகளுக்கும் மேலாகத்தண்டனை அனுபவித்து வரும் சிறைவாசிகளை விடுதலை செய்யலாம் எனும் அரசாணை வெளியிடப்பட்டது. அதனடிப்படையில், மதுரை மாமன்ற உறுப்பினர் அம்மா லீலாவதியை வெட்டிக்கொன்ற கொடுங்கோலர்களைக் கூட விடுதலை செய்த அன்றைய திமுக அரசு, இச்சட்டம் நீண்டகாலமாகச் சிறையில் வாடும் இஸ்லாமியர்களுக்குப் பொருந்தாது என்றறிவித்தது ஈவிரக்கமற்ற கொடுஞ்செயலாகும். இந்நிலையில், தற்போதைய ஆட்சியில், கடந்த செப்டம்பர் 13 அன்று தமிழகச் சட்டமன்றத்தில் உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின் அவர்கள், பேரறிஞர் அண்ணா பிறந்தநாளையொட்டி 700 ஆயுள் தண்டனை சிறைவாசிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று வெளியிட்ட அறிவிப்பிலும், இஸ்லாமிய சிறைவாசிகள் இடம்பெறாதது பெரும் ஏமாற்றமளிக்கிறது.

இஸ்லாமியர் என்பதால் விடுதலை செய்ய முடியாது என்கிற திமுகவின் மதப்பாகுபாட்டு நிலைப்பாட்டிற்கும் என்ன வேறுபாடு இருக்கிறது? பாஜகவை அடியொற்றி செல்கிறதா திமுக அரசு? ‘சிறுபான்மையினர்’ என்று பெரும்பான்மை தமிழினத்தின் அங்கத்தினராக விளங்கும் இஸ்லாமியர்களை விளித்து, அவர்களது காவலரெனத் தங்களுக்குத் தாங்களே தம்பட்டம் அடித்துக் கொள்ளும் திமுக அரசு, அம்மக்களைக் காக்கும் செயல் இதுதானா? வெட்கக்கேடு! என குறிப்பிட்டுள்ளார்.