தமிழ்நாடு

குருமூர்த்தி போல எல்லா பிராமணர்களும் கோழைகள் அல்ல - சுப்ரமணிய சுவாமி சர்ச்சை ட்வீட்

குருமூர்த்தி போல எல்லா பிராமணர்களும் கோழைகள் அல்ல - சுப்ரமணிய சுவாமி சர்ச்சை ட்வீட்

ச. முத்துகிருஷ்ணன்

திமுக செய்தி தொடர்பாளர் ராஜீவ் காந்திக்கு எதிராக வழக்குத் தொடர அனுமதி கோரி ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எழுதிய கடிதத்தை டிவிட்டரில் பகிர்ந்துள்ள சுப்ரமணிய சுவாமி அப்பதிவில் “குருமூர்த்தி போல எல்லா பிராமணர்களும் கோழைகள் அல்ல” என்று குறிப்பிட்டுள்ளார்.

பாஜக எம்.பி சுப்ரமணிய சுவாமி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எழுதியுள்ள கடிதத்தில் திமுக செய்தி தொடர்பாளர் ராஜீவ் காந்திக்கு எதிராக குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 196இன் கீழ் வழக்குத் தொடர அனுமதி கோரியுள்ளார்.

அந்த கடிதத்தில் “திமுகவின் செயலாளரும் செய்தித் தொடர்பாளருமான ஆர்.ராஜீவ் காந்திக்கு எதிராக நான் தாக்கல் செய்ய உள்ள எனது குற்றப் புகாரை இத்துடன் இணைத்துள்ளேன். இந்த புகாரை தாக்கல் செய்வதற்கு, குற்றவியல் நடைமுறைச் சட்டம் 1973ன் பிரிவு 196ன் கீழ் உங்கள் அனுமதி தேவைப்படுகிறது. 2022 ஜூன் 3 ஆம் தேதி தமிழ் பிராமணர்களை இனப்படுகொலை செய்ய வேண்டும் என்று தனது சொந்த ட்விட்டர் கணக்கின் மூலம் விளம்பரப்படுத்தியதன் மூலம், ஆர்.ராஜீவ் காந்தி இணைக்கப்பட்டுள்ள கிரிமினல் புகாரில் இருந்து இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் பல்வேறு குற்றங்களைச் செய்துள்ளார் என்பது முதன்மையாகத் தெரிகிறது.

சுப்பிரமணியன் சுவாமிக்கு எதிராக மன்மோகன் சிங், (2012) 3 SCC 1 வழக்கில் மாண்புமிகு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையும் உங்கள் அன்பான கவனத்திற்கு கொண்டு வருகிறேன். அதன்படி இதில் வழக்குத் தொடர அனுமதி வழங்குவதற்கான கொள்கைகளை நீதிமன்றம் விளக்கியுள்ளது. எனவே, பொது அமைதியைக் குலைக்கும் வகையில், நீதியின் நலன் கருதி, உங்கள் அரசியலமைப்புச் சிறப்புரிமையைப் பயன்படுத்தி, மேற்படி புகாரில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது வழக்குத் தொடர, தயவுசெய்து அனுமதி வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்று சுப்ரமணிய சுவாமி ஆளுநரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த கடிதத்தை ட்விட்டரில் பகிர்ந்துள்ள சுப்ரமணிய சுவாமி அப்பதிவில் குருமூர்த்தி போல எல்லா பிராமணர்களும் கோழைகள் அல்ல என்று குறிப்பிட்டுள்ளார். அப்பதிவில் “திரு. ஸ்டாலின் அவர்களே, பிராமணர்களிடையே கடினமான மனிதர்கள் இருக்கிறார்கள் என்று ராஜீவ் காந்தியிடம் சொல்லுங்கள். குருமூர்த்தி போல் அனைவரும் கோழைகள் அல்ல” என்று குறிப்பிட்டுள்ளார்.