தமிழ்நாடு

தீராத கொத்தடிமைகள் துயரம் - வட தமிழகத்தின் அவலநிலை..!

தீராத கொத்தடிமைகள் துயரம் - வட தமிழகத்தின் அவலநிலை..!

webteam

கொத்தடிமைமுறை ஒழிப்புச்சட்டம் வந்து 44 ஆண்டுகள் ஆகிவிட்டன. குழந்தைத் தொழிலாளர் ஒழிப்புச் சட்டம் வந்து 34 ஆண்டுகள் ஆகிவிட்டன.

திருவள்ளூர்மாவட்டம் ஊத்துக்கோட்டை வட்டம் தாமரைப்பாக்கம் கிராமத்தின் ஒரு செங்கல் சூளையில் மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் ஒருங்கிணைந்த சோதனையில் 50 குழந்தைகள் உள்பட மொத்தம் 247 பேர் மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் ஒரிஷா மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். அவர்களைப்போலவே தமிழகத்தைச் சேர்ந்தவர்களும் தொடர்ந்து மீட்கப்படுகின்றனர்.

உலகில் மொத்தம் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ள கொத்தடிமைத் தொழிலாளர்களில் 80 விழுக்காட்டினர் தெற்காசியாவில்தான் இருக்கின்றனர். இந்தியாவில் 2030 ஆம் ஆண்டிற்குள் 1,80,00,000 பேர் கொத்தடிமை முறையிலிருந்து மீட்கப்பட்டிருப்பார்கள் என்று 2016ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் அப்போதைய அமைச்சர் பண்டாருதத்தாத்ரேயா கூறினார். தமிழகத்தில் தென் தமிழகத்தைவிட, வட தமிழகத்தில்தான் அதிக அளவில் கொத்தடிமைக் கொடுமைகள் நடைபெறுகின்றன.

கடந்த ஒன்பதாண்டுகளில் தமிழகத்தில் 455 மீட்பு நடவடிக்கைகளில் 9781 பேர் மீட்கப்பட்டுள்ளனர். கடந்த ஓராண்டில் மட்டும் 73 மீட்பு நடவடிக்கைகளில் 850 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இந்த 73 மீட்பு நடவடிக்கைகளையும் துறைவாரியாகப் பிரித்தால் 26 மீட்பு நடவடிக்கைகளுக்காகச் செங்கல் சூளைகள் முதலிடத்தைப் பெறுகின்றன.

பல்லாண்டுகால மீட்பு அனுபவத்தின் நல்விளைவாகத் தமிழக அரசு ஒன் ஸ்டாப் க்ரைஸிஸ் டீம் அதாவது ஒருங்கிணைந்த மீட்புப்படையை உருவாக்கிச் செயலாற்றுகிறது. ஐஜேஎம் போன்ற தொண்டுநிறுவனங்களும் களப்பணியில் இருக்கின்றன. இப்படிப் பெருமுயற்சியெடுத்து மீட்டாலும் அவர்களுக்கு மறுவாழ்வளிப்பது பெரும்பணியாக இருக்கிறது.