திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி தன்னுடன் வாழ்ந்துவிட்டு மோசடி செய்ததாக கோவையை சேர்ந்த இளைஞர் மீது வடமாநில பெண் புகார் அளித்துள்ளார்.
மத்திய பிரதேசத்தை சேர்ந்த நிதிபாண்டே என்ற இளம் பெண் கத்தார் நாட்டில் உள்ள விமான நிலைய தொழில்நுட்ப பிரிவில் பணியாற்றி வருகிறார். அதே நிறுவனத்தில் கோவையை சேர்ந்த லட்சுமி நாராயணன் என்பவரும் பணிபுரிகிறார். இவர்கள் இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தாக தெரிகிறது. இவர்களின் திருமணத்திற்கு இரு வீட்டாரும் ஒப்புதல் அளித்ததின் காரணமாக, இருவரும் திருமணம் செய்யாமல் ஒன்றாக வாழ்ந்து வந்தாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த சில மாதங்களாக லட்சுமி நாராயணன், நிதிபாண்டேவை திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் திருமணம் செய்து கொள்வதாக தன்னிடம் ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிய லட்சுமிநாராயணன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, பாதிக்கப்பட்ட வடமாநில பெண் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தார்.
அப்போது பேசிய அவர், ஏற்கெனவே லட்சுமி நாராயணன் மீது புகார் அளித்துள்ளதாகவும் காவல்துறை நடவடிக்கை எடுக்காமல் தாமதப்படுத்தி வருவதாக குற்றம்சாட்டினார். தற்போது லட்சுமி நாராயணனுக்கு திருமண ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாகவும், மேலும் ஒரு பெண் பாதிக்கப்படாமல் தடுக்க காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.