வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள சென்னை வெள்ள முன்னெச்சரிக்கை என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதாக வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
தேசிய கடலோர ஆராய்ச்சி மையம், இந்திய தொழில்நுட்ப மையம் சென்னை, இந்திய தொழில்நுட்ப மையம் மும்பை மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்தின் தொலை உணர்வு நிறுவனம் ஆகியவை இணைந்து சென்னை வெள்ள முன்னெச்சரிக்கை என்ற அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பு நடப்பாண்டின் வடகிழக்கு பருவமழை காலத்தில் பரிசோதிக்கப்படவுள்ளது.
இதுதொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் சென்னையில் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் முன்னிலையில் கையெழுத்தானது. வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் மற்றும் தேசிய கடலோர ஆரய்ச்சி மைய இயக்குநர் ரமணமூர்த்தி ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயகுமார், சென்னை வெள்ள முன்னெச்சரிக்கை அமைப்பு என்பது வெள்ள அபாய மேலாண்மையில் சரியான முடிவுகள் மேற்கொள்ள உதவி புரியும் தொழில்நுட்பம் என தெரிவித்தார்.