தமிழ்நாடு

“பெட்டிக்கடையில் சாதாரணமாக கிடைக்கும் சிரஞ்சுகள்” - கண்டுகொள்ளுமா அரசு?

“பெட்டிக்கடையில் சாதாரணமாக கிடைக்கும் சிரஞ்சுகள்” - கண்டுகொள்ளுமா அரசு?

webteam

மதுரை அருகே உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இல்லாத சிரஞ்சுகள் அதன் உள்ளே உள்ள பெட்டிகடையில் சர்வ சாதாரணமாய் கிடைப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மதுரை மாவட்டம் சமயநல்லூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஒன்று இயங்கி வருகிறது. இங்கு சுமார் 200 க்கும் மேற்பட்ட நோயளிகள் சிகிச்சை பெறுவதற்காக தினந்தோறும் வந்து செல்கின்றனர். 

இந்நிலையில் இங்கு வரும் நோயாளிகளிடம் இன்சுலின் மருந்து செலுத்துவதற்கு சிரஞ்சு இல்லை எனவும் எனவே வெளியில் இருக்கும் பெட்டி கடையில் வாங்கி வர வேண்டும் எனவும் செவிலியர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதையடுத்து அருகில் இருக்கும் பெட்டிகடைக்கு சென்று நோயாளிகள், கர்ப்பிணிகள் எனப் பல்வேறு தரப்பினரும் சிரஞ்சு வாங்கி வந்து ஊசி போட்டுக்கொள்வது தொடர்கதையாக இருந்து வருகிறது. இதுகுறித்து புதிய தலைமுறைக்கு தகவல் கிடைத்தது. 

இதைத்தொடர்ந்து புதிய தலைமுறை கள ஆய்வு செய்ததில் குறிப்பிட்ட பெட்டிக்கடையில் 10 ரூபாய்க்கு சிரஞ்சு கிடைப்பது தெரியவந்தது. மருத்துவமனையில் இருப்பு இல்லாத நிலையில் பெட்டிக்கடையில் சிரஞ்சு கிடைப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. செவிலியர்கள் அறிவுறுத்தலின் பேரில் தான் இங்கே விற்கப்படுகிறது எனக் கடை உரிமையாளர்  தெரிவிக்கிறார். 

இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரி அர்ஜூன் குமாரிடம் கேட்டபோது, “ இதுபோன்ற தகவல்கள் தங்களுக்கும் கிடைத்தது. ஆனால் நாங்கள் ஆய்வு செய்தபோது சிரஞ்சுகள் அங்கே கண்டுபிடிக்கப்படவில்லை. அதனால் இதுபோன்று நடக்க வாய்பில்லை” எனத் தெரிவித்தார். 

மேலும் இதுகுறித்த வீடியோவும் ஆடியோவும் எங்களிடம் உள்ளது எனக் கூறிய பிறகு, தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். கிராமப்பகுதியாக இருப்பதால் இப்பகுதியில் மருந்தகம் ஏதும் இல்லை. மருந்தகத்தில் சிரஞ்சு வாங்கவேண்டுமென்றால் கிட்டத்தட்ட 2 கிலோ மீட்டர் தூரம் கடந்து செல்லவேண்டியுள்ளது எனவும் செவிலியர்களே இங்கு கிடைக்கும் என சொல்வதால்தான் வாங்குகிறோம் எனவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். 

இதனால் செவிலியர்களுக்கு ஏதேனும் இதில் பங்கு இருக்கிறதா என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்த வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.