தமிழ்நாடு

மளிகை கடைகளில் விற்பனையாகும் சத்துணவு முட்டைகள் - மெகா ஊழலா?

மளிகை கடைகளில் விற்பனையாகும் சத்துணவு முட்டைகள் - மெகா ஊழலா?

rajakannan

அரசுப் பள்ளிகளில் சத்துணவு திட்டத்தில் வழங்கப்படும் முட்டைகள், வெளிசந்தைகளில் விற்கப்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழகத்தில் அரசுப் பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் சத்துணவு திட்டத்தில் மதிய முட்டை வழங்கப்பட்டு வருகிறது. இந்த முட்டைகள் தனியார் நிறுவனங்களிடம் இருந்து அரசால் கொள்முதல் செய்யப்படுகின்றன. சத்துணவு முட்டையால் தமிழகத்தில் 52 லட்சம் பேர் பயனடைகின்றனர். தமிழக அரசு ஒரு முட்டையை ரூ4.34 வீதம் வாங்குகிறது. சத்துணவில் வழங்கப்படும் முட்டைகளில் நீல நிறத்தில் தமிழக அரசின் சீல் இருக்கும். 

இந்நிலையில், தமிழக அரசின் சீல் வைக்கப்பட்ட முட்டைகள் வெளி சந்தைகளில் விற்கப்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் உள்ள கடைகளில் சத்துணவு முட்டைகள் கிடைப்பது குறித்து டைம்ஸ் ஆப் இந்தியா நாளில் இன்று செய்தி வெளியிட்டுள்ளது. மளிகைக் கடைகளில் சத்துணவு முட்டை விற்பனையாவது குறித்து அரசு அதிகாரிகள் கூறுகையில், சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கின்றனர். சட்டவிரோதமாக முட்டைகள் வெளிசந்தைகளில் விற்பனை செய்யப்படுவதையும், பழைய முட்டைகள் விநியோகிக்கப்படுவதை தடுக்கவும் அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார். 

இதுகுறித்து தமிழ்நாடு குழந்தைகள் உரிமை கண்காணிப்பு மையத்தின் ஒருங்கிணைப்பாளர் ஆண்ட்ரு சிசுராஜ் கூறுகையில், “அங்கன்வாடி மையங்களில் குழந்தைகள் வாராத நேரத்தில் முட்டைகள் மீதமாகும். அதனை, அங்கன்வாடி உதவியாளர்கள் வெளியே எடுத்துச் செல்வார்கள். அதேபோல், அங்கன்வாடி மையங்களுக்கு முட்டைகளை சப்ளை செய்யும் விநியோகஸ்தர்கள் முட்டைகளை குறைத்து வெளிசந்தைகளில் விற்கிறார்கள். பெரும்பாலும் இதுபோன்று வெளிசந்தைகளில் விற்கப்படும் முட்டைகளில் உள்ள அரசின் சீல் கெமிக்கல் கொண்டு அழித்துவிடுவார்கள்” என்றார். 

இந்தச் செய்தி குறித்து திமுக மாநிலங்களவை எம்.பி கனிமொழி தனது ட்விட்டரில், “பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவுக்கான முட்டைகள், வெளிச் சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக வந்துள்ள டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. எடப்பாடி-அதிமுக அரசுப் பள்ளி மாணவர்களின் வயிற்றில் அடித்து கூட ஊழல் செய்ய துணிந்திருப்பது வேதனையானது” என்று குறிப்பிட்டுள்ளார்.