தமிழ்நாடு

"திருப்பூரில் எந்த அசம்பாவிதங்களும் நிகழவில்லை" - காவல் ஆணையர் பிரவீன்குமார் அபிநவ்!

"திருப்பூரில் எந்த அசம்பாவிதங்களும் நிகழவில்லை" - காவல் ஆணையர் பிரவீன்குமார் அபிநவ்!

webteam

சமூக வலைதளங்களில் பரவும் வீடியோக்களில் வருவது போல திருப்பூரில் எந்த அசம்பாவித சம்பவங்களும் நிகழவில்லை என திருப்பூர் மாநகர காவல் ஆணையர் பிரவீன்குமார் அபிநவ் தெரிவித்தார்.

திருப்பூர் அங்கேரிபாளையம் பகுதியில் உள்ள பனியன் ஏற்றுமதி நிறுவனத்தில் இன்று திருப்பூர் மாநகர காவல் ஆணையர் பிரவீன்குமார் அபிநவ், மாநகர துணை ஆணையர் அபிஷேக் குப்தா ஆகியோர் அங்கு பணியாற்றி வரும் வடமாநில தொழிலாளர்களை நேரில் சந்தித்தார்.

அப்போது சமூக வலைதளங்களில் பரவி வரும் பொய்யான வீடியோக்களை நம்ப வேண்டாம் எனவும் வடமாநில தொழிலாளர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு குறித்தும் விளக்கமாக எடுத்துரைத்தார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த காவல் ஆணையர் பேசுகையில், சமூக வலைதளங்களில் பரவும் பொய்யான வீடியோக்கள் காரணமாக வடமாநில தொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளனர். அவர்களின் அச்சத்தை போக்கும் வகையில் மாநகர காவல்துறை சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சமூக வலைதளங்களில் பரவுவது போல திருப்பூரில் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நிகழவில்லை. கள நிலவரம் அமைதியாகவே உள்ளது.

இது குறித்து தொழிலாளர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். சமூக வலைதளங்களில் பரப்பப்படும் வீடியோக்கள் குறித்து நடவடிக்கை எடுக்க சைபர் கிரைம் காவல்துறை சார்பில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.