தமிழ்நாடு

ஜல்லிக்கட்டு சட்டத்துக்கு தடை இல்லை: உச்சநீதிமன்றம்

ஜல்லிக்கட்டு சட்டத்துக்கு தடை இல்லை: உச்சநீதிமன்றம்

webteam

ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் தமிழக அரசின் சட்டத்துக்கு இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது.

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்கும் வகையில், மத்திய அரசின் விலங்குகள் வதைத் தடுப்புச் சட்டத்தில் மாநில அளவிலான திருத்தம் செய்து தமிழக அரசு சட்டம் இயற்றியது. இந்த சட்ட மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியும் ஒப்புதல் அளித்தார். இந்த நிலையில், ஜல்லிக்கட்டு சட்டத்துக்கு எதிராக கூபா உள்ளிட்ட விலங்குகள் நல அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தன.

இந்த வழக்குகள் மீதான விசாரணை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசின் ஜல்லிக்கட்டு சட்டம், கடந்த 2014ம் ஆண்டு உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக இருப்பதாக நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்கும் வகையில் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டத்துக்கு இடைக்காலத் தடை விதிக்க விலங்குகள் நல அமைப்புகள் சார்பாக வாதிடப்பட்டது.

ஆனால், விலங்குகள் நல அமைப்புகளின் கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்றம், சட்டம் குறித்து 6 வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டது. அதேபோல ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்கும் வகையில் மத்திய அரசு சார்பில் கடந்த 2016ம் ஆண்டு வெளியிடப்பட்ட அறிவிக்கையைத் திரும்பப் பெற அனுமதி அளிப்பதாகவும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது.