தமிழ்நாடு

நீலகிரி: ஊராட்சி அலுவலம் முன்பு அமர்ந்து படிக்கும் மாணவர்கள் - காரணம் இதுதான்!

நீலகிரி: ஊராட்சி அலுவலம் முன்பு அமர்ந்து படிக்கும் மாணவர்கள் - காரணம் இதுதான்!

kaleelrahman

முதுமலை வனப்பகுதிக்குள் உள்ள அரசுப் பள்ளிக்குச் செல்ல சாலை வசதி இல்லாததால் அங்கு படிக்கும் மாணவர்கள் ஊராட்சி அலுவலகம் முன்பு அமர்ந்து பெற்றோர்களிடம் பாடம் படித்தனர்.

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதிக்குள் உள்ளது முதுகுளி, நாகம்பள்ளி, புளியாலம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் கூவக்கொல்லி பகுதியில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் சென்று கல்வி பயின்று வருகின்றனர். இங்கு பயிலும் மாணவர்கள் வனப்பகுதியில் உள்ள மண் சாலை வழியாக சென்று வருகின்றனர். ஆனால், மழை காலங்களில் இந்த மண்சாலையில் சென்று வருவது மிகவும் சிரமம்.

இந்த நிலையில் கூடலூரில் சமீபத்தில் ஜமாபந்தி நடந்த போது முதுமலை பகுதியைச் சேர்ந்த உதயகுமார் என்பவர் மாணவர்கள் பள்ளிக்கு நடந்து செல்ல சாலை வசதி அமைத்துக் கொடுக்க வேண்டும் என மனு கொடுத்திருந்தார். மனுவை விசாரித்த கூடலூர் வருவாய் கோட்டாட்சியர் சாலை அமைப்பதற்கான அனுமதி வழங்கியதோடு அதற்கான பணிகள் மழை முடிந்தவுடன் துவங்கும் என கூறியிருக்கிறார்.

அப்போது பெற்றோர்கள், சாலை சீரமைக்கும் வரை முதுகுளி பகுதியில் உள்ள ஊராட்சி அலுவலக கட்டிடத்தில் பள்ளியை தற்காலிகமாக செயல்பட அனுமதி வேண்டும் என கேட்டிருக்கின்றனர். அதிகாரிகளும் தற்காலிகமாக ஊராட்சி அலுவலக கட்டிடத்தை பயன்படுத்திக் கொள்ள அனுமதி அளித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இன்று காலை பெற்றோர்கள் மாணவர்களை முதுகுளி பகுதியில் உள்ள ஊராட்சி அலுவலகத்திற்கு அழைத்து வந்துள்ளனர். ஆனால் அதிகாரிகள் உறுதி அளித்ததை போல கட்டிடம் திறக்கப்படாமல் பூட்டி கிடந்திருக்கிறது. இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர்கள் மாணவர்களை ஊராட்சி அலுவலக கட்டிடம் முன்பு அமர வைத்து, பெற்றோர்களைக் கொண்டு பாடம் நடத்த தொடங்கினர்.

தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த வருவாய்த் துறையினர் மற்றும் காவல் துறையினர் பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சாலை அமைத்துக் கொடுக்கும் வரை, முதுகுளி பகுதியில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் கட்டிடத்தில் மாணவர்கள் அமர்ந்து படிக்க வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது. இதனையடுத்து ஊராட்சி அலுவலக வாசலில் அமர்ந்து படித்த மாணவர்கள், தற்காலிகமாக ஏற்படுத்திக் கொடுக்கப்பட்ட அறைக்குள் சென்று பாடங்களை படித்தனர்.

அரசுப் பள்ளிக்கு செல்லக்கூடிய சாலையை சீரமைக்கும் வரை மாணவர்களை இதே அறையில் அமர்ந்து படித்துக் கொடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.