தமிழ்நாடு

நோயாளியை அழைத்துச் செல்ல ஆள் இல்லை - கேட்பாரன்றி சாலையில் இறந்த பரிதாபம்

நோயாளியை அழைத்துச் செல்ல ஆள் இல்லை - கேட்பாரன்றி சாலையில் இறந்த பரிதாபம்

webteam

ஆம்பூரில் காயமடைந்த நபரை மேல் சிகிச்சைக்கு மருத்துவர்களால் அனுப்ப முடியாததால் அவர் தற்போது உயிரிழந்துள்ளார்.


திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சுண்ணாம்பு காலை பகுதியைச் சேர்ந்தவர் அஜீஸ். இவர் துத்திப்பட்டு பகுதியில் உள்ள தனியார்
தொழிற்சாலை உணவுவிடுதியில் தேநீர் தயார் செய்யும் ஊழியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்று இரவு காயங்களுடன் ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு வந்த அஜீஸின் உடல்நிலை மிக மோசமாக இருந்ததால் அவரை வேலூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்ல மருத்துவர்கள் ஆம்புலன்ஸை ஏற்பாடு செய்துள்ளனர். ஆனால் அவருடன் செல்ல யாரும் இல்லாததால் மருத்துவர்கள் அவரை அனுப்ப முடியாமல் காத்திருந்தனர்.

இதனையடுத்து நெடுநேரமாக காத்திருந்த அவர், சாலையோரம் சென்று படுத்ததாகச் சொல்லப்படுகிறது. அப்போது அவரை பார்த்த பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மீட்டு மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது மருத்துவர்கள் அவரை மேல்சிகிச்சைக்கு அனுப்ப முடியாததற்கான காரணத்தைக் கூறியுள்ளனர். இதனால் அதன் பின்னரும் அவர் சாலையோரம் சென்று படுத்துள்ளார். இந்நிலையில் அவர் தற்போது உயிரிழந்துள்ளார். சடலத்தை கைப்பற்றி ஆம்பூர் நகர போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காயமடைந்த நபர் மருத்துவமனை வளாகம் அருகே உள்ள சாலையில் சுற்றித்திரிந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.