பாஜக இல்லாமல் யாரும் ஆட்சியமைக்க முடியாது என்ற நிலை தமிழகத்தில் உருவாகும் என அக்கட்சியின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
மதுரையில் சட்டமன்ற தேர்தலுக்கான ஆலோசனைப்பணிகள் தொடர்பாக கட்சியினரை சந்திக்க பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா வந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், “அண்ணாமலை பாஜகவில் சேர்ந்தால் உங்களுக்கு என்ன எரிச்சல். இந்து விரோத வெறுப்புணர்வு ஐஏஎஸ் அதிகாரி சகாயம். ஐஏஎஸ் ஆக இருந்துகொண்டு இந்துவிரோத கண்காட்சியை லயோலா கல்லூரியில் திறந்து வைத்த சகாயத்தை பற்றி யாரும் ஏன் பேசவில்லை.
செல்லூர் ராஜூ என்ன பெரும் விஞ்ஞானியா? ஆன்மீகத்திற்கும் கல்விக்கும் சேவையாற்றிய நகரத்தார் சமுதாய பெண்களை பற்றி பேசி சிக்கலில் மாட்டிக்கொண்ட செல்லூர் ராஜூவை காப்பாற்றியது யார் என துணைமுதல்வரிடம் கேட்டால் தெரியும். செல்லூர் ராஜூ எனக்கு நல்ல நண்பர். ஆனால் அவர் பேசுவது தவறு. செல்லூர் ராஜூவும், ஜெயக்குமாரும் பேசுவது சரியல்ல. அதுபோன்ற கருத்துக்களை பேச வேண்டாம்.
தமிழக அரசு அதிகாரிகள் தவறு செய்தால் சுட்டிக்காட்டுவது என் பொறுப்பு. தமிழக அரசை நான் விமர்சிப்பது கிடையாது. தோழமை சுட்டுதலோடு குறைகளை சொன்னால் பரிகாரம் செய்ய வேண்டும். எல்லை மீறி பேசுவது கூட்டணிக்குள் பிரச்சனைகளை ஏற்படுத்தும். தமிழக அரசை பற்றி ஒரு டிவிட் கூட நான் செய்யாத போது, ஆண்மை குறித்து ஜெயக்குமார் பேசுகிறார்.
கூட்டணியை கெடுக்க வேண்டும், அரசுக்கு பிரச்சனை கொடுக்க வேண்டும் என நினைக்கிறார்களா என்று தெரியவில்லை. பாஜகவை இழிவாக பேசுவது பிரதமரை இழிவாக பேசுவது போல ஆகும். மத்திய அரசால் பயனடைந்த தமிழக பயனாளிகளை வாக்காளர்களாக மாற்றுவதற்கான பணிகள் நடைபெறுகிறது. பாஜக இல்லாமல் யாரும் ஆட்சியமைக்க முடியாது என்ற நிலையை கொண்டு வந்தது போலவும், எங்களுடைய வீச்சு நாடு முழுவதும் இருப்பதை போலவும் தமிழகத்தில் தேர்தல் தயாரிப்புகள் இருக்கும்.” எனத் தெரிவித்தார்.