தமிழ்நாடு

’ஒரு தர்ப்பூசணி ரூ.1க்கு கூட யாரும் வாங்கவில்லை’ - மாற்று விவசாயம் செய்த பட்டதாரி வேதனை

’ஒரு தர்ப்பூசணி ரூ.1க்கு கூட யாரும் வாங்கவில்லை’ - மாற்று விவசாயம் செய்த பட்டதாரி வேதனை

webteam

சீர்காழி அருகே தர்பூசணி பழங்களை நன்கு விளைவித்தும், சொற்ப தொகைக்கு கூட யாரும் வாங்க முன்வராததால் ஒரு விவசாயக் குடும்பம் சோகத்தில் மூழ்கியிருக்கிறது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள திருவெண்காட்டைப் பகுதியைச் சேர்ந்தவர் பொறியியல் பட்டதாரி ராஜா. பொறியியல் படிப்பை முடித்த ராஜா தகுந்த வேலைக் கிடைக்காததால் வெளியூர்களில் அவ்வப்போது கிடைத்த சிறு வேலைகளை செய்து வந்தார். பொதுமுடக்கத்தால் அந்த வேலைகளும் இல்லாமல் போக அவருக்குச் சொந்தமான நிலத்தில் தர்பூசணி சாகுபடியை தொடங்கியுள்ளார். தர்பூசணிக்குத் தேவையான தண்ணீர் வசதி கிடைக்காததால் மோட்டர் மூலம் தண்ணீர் இரைத்து, அதனை குடங்கள் வழியாகப் பிடித்து ஒவ்வொருச் செடிக்கும் ஊற்றியுள்ளார்.

மூன்று மாதக்காலம் அதனை கண்ணும் கருத்துமாக பார்த்து வந்ததால் பழங்கள் நல்ல மகசூல் எட்டியுள்ளது. ஆனால் பொதுமுடக்கத்தால் பழங்களை அவரால்  நன்முறையில் விற்பனை செய்ய முடியவில்லை. இதனால் தற்போது அந்தத் தர்பூசணி பழங்கள் அழுகியுள்ளது.

இது குறித்து ராஜா கூறும் போது “ வெளியூர் மட்டுமின்றி உள்ளூர் சந்தைளும் மூடப்பட்டதால் தர்பூசணியை ஒரு ரூபாய்க்கு விற்றேன். ஆனால் அப்போது கூட அதனை யாரும் முன்வரவில்லை. தற்போது தர்பூசணி பழங்கள் அனைத்தும் அழுகி விட்டது. சரி அழுகியப் பழத்தை அப்புறப்படுத்தலாம் என்றால் அதற்கும் கூட ஆட்கள் கிடைக்கவில்லை.

எங்கள் குடும்பத்தால் நிலத்தைப் பார்க்கவே முடியவில்லை. இதனால் நாங்கள் வீட்டிலேயே முடங்கி கிடக்கிறோம். ஆகவே நிலத்தை தோட்டக்கலை துறையினர் நிலத்தை ஆய்வு செய்து ஏதேனும் நிவாரணம் வழங்கினால் மட்டுமே எங்களால் மாற்று சாகுபடி செய்ய முடியும்” என்று கூறினார்.