தமிழ்நாடு

பெரும்பான்மையை நிரூபிக்க எத்தனை பேர் தேவை?

பெரும்பான்மையை நிரூபிக்க எத்தனை பேர் தேவை?

webteam

முதலமைச்சர் பன்னீர் செல்வம் கொடுத்து வரும் அடுத்தடுத்த அதிரடிப் பேட்டிகள் தமிழக அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.

முதலமைச்சர் பதவியை கட்டாயத்தின் பேரில்தான் ராஜினாமா செய்தேன் என்று கூறிய அவர், தேவைப்பட்டால் தனது ராஜினாமாவை திரும்பப் பெறுவேன் என்றும் கூறினார். அவரது ராஜினாமாவை ஆளுநர் ஏற்கனவே ஏற்றுக் கொண்டிருக்கிறார். இந்தநிலையில், ஒருவேளை ஓ.பன்னீர் செல்வம் ராஜினாமாவை வாபஸ் பெற விரும்பினால் அதை ஆளுநர் ஏற்பாரா? என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது. ஆனால் கட்டாயத்தின் பேரில் ராஜினாமா செய்ததாக அவர் சொல்லும் பட்சத்தில், அவருக்கு அவையில் பெரும்பான்மை இருக்கிறதா என்பதை ஆளுநர் கவனிப்பார். அதையும் நிரூபிப்பதாக சொல்லியிருக்கிறார் பன்னீர் செல்வம்.

பெரும்பான்மையை நிரூபிக்க அவருக்கு எத்தனை எம்எல்ஏக்களின் ஆதரவு வேண்டும்?

ஜெயலலிதாவின் மரணத்தைத் தொடர்ந்து தற்போதைய அவை உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 233. அதில் 117 எம்எல்ஏக்களின் ஆதரவு வேண்டும்.

இதற்கிடையில், அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா தலைமையில் எம்எல்ஏக்கள் கூட்டம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இந்தகூட்டத்தில் பேசிய சசிகலா, அதிமுகவின் ஒற்றுமையை எந்த சக்தியாலும் உடைக்க முடியாது என்று எம்எல்ஏக்கள் மத்தியில் பேசியுள்ளார். கட்சியின் பொதுச் செயலாளர் தலைமையில் நடந்த எம்எல்ஏக்கள் கூட்டத்தில் 131 எம்எல்ஏக்கள் கலந்து கொண்டதாக அதிமுகவின் செங்கோட்டையன் தகவல் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்ட்ராவில் இருந்து தமிழகம் திரும்பும் ஆளுநர், சசிகலா மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருதரப்பினரையும் தனித்தனியே சந்தித்துப் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு சந்தித்துப் பேசும் நிலையில், இருதரப்பும் தமக்கு ஆதரவு இருப்பதாகக் கூறும்பட்சத்தில், தமிழக சட்டப்பேரவையைக் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிடுவார் என்று தெரிகிறது.