தமிழ்நாடு

பாலத்திற்காக தோண்டிய பள்ளத்தில் விழுந்து உயிரிழந்த மெக்கானிக்..!

பாலத்திற்காக தோண்டிய பள்ளத்தில் விழுந்து உயிரிழந்த மெக்கானிக்..!

Rasus

திண்டுக்கல் அருகே புதிதாக கட்டப்படும் பாலத்திற்கு தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்த மெக்கானிக் பரிதாபமாக உயிரிழந்தார். இதனிடையே பள்ளம் குறித்த முறையான அறிவிப்பு பலகை வைக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

திண்டுக்கல் திருச்சி சாலையில் தீப்பாச்சியம்மன் கோயில் அருகே இருசக்கர வாகனம் பழுது பார்க்கும் கடை நடத்தி வருபவர் சங்கர். இவர் திண்டுக்கல்லை அடுத்துள்ள ட்ரெஸ்ஸரி காலனியில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் நள்ளிரவு இருசக்கர வாகனத்தில் செட்டிநாயக்கன்பட்டி செல்வதற்காக காந்திநகர் வழியாக சென்றுள்ளார்.

அந்தச் சாலையில் புதிதாக பாலம் அமைப்பதற்கு சுமார் 15 அடி ஆழத்தில் பள்ளம் தோண்டப்பட்டு கடந்த 4 மாதமாக எந்தப் பணியும் நடைபெறாமல் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது. பள்ளம் தோண்டப்பட்ட இடத்தில் எந்த அறிவிப்பு பலகையும் வைக்கப்படவில்லை. இந்நிலையில் அந்த வழியாக வந்த சங்கர் பள்ளம் தோண்டி இருப்பதை கவனிக்காமல் இருசக்கர வாகனத்துடன் பள்ளத்தில் தவறி விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இன்று காலை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் சங்கர் இறந்து கிடப்பதை பார்த்து தாடிக்கொம்பு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர் இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சங்கரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர்.