முன்கூட்டிய விடுதலை செய்வதில் முன்னுரிமை எதுவும் பின்பற்றப்படுவதில்லை என தமிழக உள்துறை செயலர் தரப்பில் மதுரைக்கிளையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலவளவு கொலை வழக்கில் 13 பேர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் அரசுத் தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், "2008-ல் அண்ணா நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மேலவளவு கொலை வழக்கில் சிறையில் இருந்த 3 பேர் முன்விடுதலை செய்யப்பட்டனர். அந்த விவகாரத்தில் பின்பற்றப்பட்ட நடைமுறையே தற்போது 13 பேர் விடுதலை செய்யப்பட்டதிலும் பின்பற்றப்பட்டது. முன்கூட்டியே விடுதலை செய்யப்படுபவர்களின் பட்டியலை தயாரிக்கும் குழு 2018 பிப்ரவரி வரை 1,769 பேரை தேர்வு செய்தது. அவர்களில் 1,649 பேரை முன்விடுதலை செய்வதற்காக அனுமதி 2018 பிப்ரவரியில் வழங்கப்பட்டது. மீதமுள்ளவர்களில் 97 பேர் நிராகரிக்கப்பட்டனர்.
8 பேர் உயிரிழந்தனர். 15 பேர் மீதான முடிவு இன்னமும் பரிசீலனையில் உள்ளது. விடுதலை செய்யப்பட்ட 13 பேரும் 14 ஆண்டிலிருந்து 17 ஆண்டு வரை சிறையில் இருந்துள்ளனர். அவர்களுக்கான விடுப்புக்காலமும் அதிகம் உள்ளது.
மேலும், முன்கூட்டிய விடுதலையில் முன்னுரிமை எதுவும் பின்பற்றப்படுவதில்லை.
13 பேர் விடுதலைக்குப் பின்னர் எவ்விதமான சட்டம் ஒழுங்கு பிரச்னையும் ஏற்படவில்லை" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் இடைக்கால உத்தரவு மதியம் 2.15 மணிக்கு பிறப்பிக்கப்பட உள்ளது.