தமிழகத்தில் உணவுப் பொருட்களில் கலப்படம் என்ற பேச்சுக்கே இடமில்லை என உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் இன்று கூட்டுறவு, உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. இதில் பேசிய திமுக உறுப்பினர் செளந்திரபாண்டியன், தமிழகத்தில் உணவுப் பொருட்களில் கலப்படம் அதிகரித்துவிட்டதாகவும், உணவு கலப்படத்தில் தமிழகம் 2வது இடத்தில் உள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிப்பதாகவும் குற்றம்சாட்டினார்.
அதற்குப் பதிலளித்த அமைச்சர் காமராஜ், தமிழகத்தில் உணவு கலப்படங்கள் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றார். ஒவ்வொரு பொருளும் தர கட்டுப்பாட்டு ஆணையத்தின் மூலம் ஆய்வு செய்யப்பட்டு மக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருவதாகவும் கூறினார். மேலும், எந்தவித பிரச்னையுமின்றி உணவுப் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருவதாகவும், பொது விநியோக திட்டத்தின் மூலம் மக்களுக்கு தரமான பொருட்கள் வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார்.