தமிழ்நாடு

அதிமுக பொதுக்குழுவில் புதிய தீர்மானங்களை நிறைவேற்ற தடை - நள்ளிரவில் பரபர தீர்ப்பு

ஜா. ஜாக்சன் சிங்

அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் புதிய தீர்மானங்களை நிறைவேற்ற தடை விதித்து சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு பரபரப்பான தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பானது கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு சாதகமானதாக கருதப்படுகிறது.

அதிமுக தலைமையகத்தில் இரண்டு வாரங்களுக்கு முன்பு நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ஒற்றைத் தலைமை கோஷம் எழுப்பப்பட்டது. இதையடுத்து, ஓபிஎஸ் - ஈபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே கடும் வாக்குவாதமும், மோதலும் ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக, தங்கள் பலத்தை காட்டுவதற்காக ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரும் தத்தம் தங்கள் ஆதரவாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்தி வந்தனர். இதில் மொத்தமுள்ள 75 மாவட்டச் செயலாளர்களில் 68-க்கும் மேற்பட்டோர் ஈபிஎஸ்-க்கு ஆதரவு தெரிவித்தனர். ஓபிஎஸ்-க்கு ஆதரவு தெரிவித்த மாவட்டச் செயலாளர்களின் எண்ணிக்கை 6-ஆக சரிந்தது. இந்த சூழலில், 23-ம் தேதி (இன்று) அதிமுக பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றால் தனக்கு இருக்கும் பலத்தை வைத்து ஈபிஎஸ் ஒற்றைத் தலைமையாக உருவெடுத்து விடுவார் என ஓபிஎஸ் தரப்பு கலக்கமடைந்தது.

இதனைத்தொடர்ந்து, இந்த பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றால் சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படும் எனக் கூறி, இக்கூட்டத்துக்கு தடைவிதிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நேற்று மதியம் விசாரித்த நீதிபதி, பொதுக்குழுக் கூட்டத்துக்கு தடை விதிக்க மறுத்து மனுவை தள்ளுபடி செய்தது. இது, ஓபிஎஸ் தரப்புக்கு பெரும் பின்னடைவாக கருதப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, ஒற்றை நீதிபதியின் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து உயர் நீதிமன்றத்தில் ஓபிஎஸ் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மேலும், இதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எனவும் கோரப்பட்டது. இந்த மனுவை பரிசீலித்த உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, அவசர வழக்காக இதனை விசாரிக்க ஒப்புக் கொண்டார். அதன்படி, நீதிபதிகள் துரைசாமி மற்றும் சுந்தரமோகன் அடங்கிய அமர்வு நள்ளிரவு 12.30 மணிக்கு இந்த மனுவை விசாரித்தது. நீதிபதி துரைசாமி வீட்டில் இந்த விசாரணை நடைபெற்றது. இதனால் அவரது வீட்டின் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்புப போடப்பட்டிருந்தது.

வழக்கு விசாரணையின்போது இருதரப்பு வழக்கறிஞர்களும் காரசாரமான வாதங்களை முன்வைத்தனர். விடிய விடிய நடைபெற்ற விசாரணையின் முடிவில், அதிகாலை 5 மணியளவில் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பை வாசித்தனர். அதில், "அதிமுக பொதுக்குழுக் கூட்டம் நடைபெற எந்த தடையும் இல்லை. ஆனால், இந்தக் கூட்டத்தில் ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டிருந்த 23 தீர்மானங்களை மட்டுமே நிறைவேற்ற வேண்டும். வேறு புதிய தீர்மானங்களை நிறைவேற்றக் கூடாது. மற்ற விவகாரங்கள் குறித்து விவாதிக்கலாம். எனினும், அவை குறித்து முக்கிய முடிவுகளை எடுக்கக் கூடாது" என உத்தரவிட்டனர்.

இந்த தீர்ப்பால் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர். தீர்ப்பு வெளியானதும் சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதிலும் உள்ள ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அதே சமயத்தில், ஈபிஎஸ் ஆதரவாளர்களை இந்த தீர்ப்பு அதிர்ச்சியடைய செய்துள்ளது. முக்கிய முடிவுகளை எடுக்கக் கூடாது என்ற நீதிமன்ற உத்தரவின் பின்னணியில், இன்று காலை 10 மணிக்கு அதிமுக பொதுக்குழுக் கூட்டம் நடைபெறவுள்ளது.