தமிழ்நாடு

ஒத்துழைப்பு இல்லை? - கட்கரியின் குற்றச்சாட்டுக்கு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மறுப்பு

ஒத்துழைப்பு இல்லை? - கட்கரியின் குற்றச்சாட்டுக்கு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மறுப்பு

Veeramani

தமிழ்நாடு அரசு போதிய ஒத்துழைப்பு அளிக்காததால் சாலை அமைக்கும் பணிகள் நிற்பதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி குற்றம்சாட்டி இருந்த நிலையில், அதற்கு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, தமிழ்நாட்டில் சாலைப் பணிகள் தொடர்பாக சில துறைகளில் ஒப்புதல் கிடைப்பதில் பல்வேறு சிக்கல்கள் நிலவுகின்றன. இந்த பிரச்னைகளை தீர்க்க வேண்டுமென முதலமைச்சரிடம் ஏற்கெனவே கோரிக்கை விடுத்திருந்தோம். கட்டுமான பணிகளை தொடர்ந்து மேற்கொள்வதில் பிரச்னைகள் உள்ளன. ஒப்புதல்கள் கிடைப்பதில் காலதாமதம் ஆவதால், கட்டுமானப் பணிகள் தடைபட்டுள்ளன. தமிழ்நாடு அரசு போதிய ஒத்துழைப்பு அளிக்காததால் சாலை அமைக்கும் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் ஒப்புதல் கிடைத்தால்தான் சாலை பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று குற்றம்சாட்டியிருந்தார்.

நிதின் கட்கரியின் குற்றச்சாட்டை தொடர்ந்து தமிழ்நாடு அரசின் நெடுஞ்சாலைத்துறை செயலர் தீரஜ்குமார் மற்றும் நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்களுடன் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆலோசனையில் ஈடுபட்டார். இந்நிலையில், சாலைப் பணிகளுக்கு தமிழ்நாட்டின் சார்பில் முழு ஒத்துழைப்பு வழங்கப்பட்டு வருவதாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.