சங்கரன்கோவில் அருகே பாஞ்சாகுளத்தில் உள்ள அரசுப்பள்ளியில் சாதிய பாகுபாடு எதுவும் இல்லை என மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி விளக்கமளித்துள்ளார்.
பாஞ்சாகுளம் கிராமத்தில் பெட்டிக்கடையில் பட்டியலின சிறார்கள் மற்றும் பொதுமக்களுக்கு பொருட்களை வழங்க மறுத்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்த விவகாரத்தில் இருவர் கைதுசெய்யப்பட்ட நிலையில், மூவர் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டது. இந்நிலையில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும் சாதிய பாகுபாடு உள்ளதாக மாணவர்கள் சிலர் புகார் கூறியிருந்தனர்.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட பள்ளியில் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி கபீர் நேரில் ஆய்வு நடத்தினார். அப்போது 23 மாணவர்களில் 10 பேர் மட்டுமே பள்ளிக்கு வந்திருந்தனர். பட்டியலின மாணவ, மாணவிகள் யாரும் வரவில்லை. இருக்கையில் அமர்வதில் பாகுபாடு உள்ளதாக மாணவர்கள் கூறிய குற்றச்சாட்டு குறித்து ஆசிரியர்களிடம் கல்வி அதிகாரி விசாரணை நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி கபீர், “மாணவர்கள் கூறிய புகார் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. பள்ளியில் தனியாக இருக்கைகள் எதுவும் இல்லை. அனைத்து மாணவர்களும் சமமாக அமர்ந்து படிக்கும் சூழலே உள்ளது. பள்ளியில் சாதிய பாகுபாடு என்ற புகாருக்கு ஆதாரமில்லை மாவட்ட ஆட்சியரிடம் அறிக்கையளிக்கப்படும்” என்று தெரிவித்தார்.
இதனிடையே, தென்காசி மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் சுப்புலட்சுமியும் பாஞ்சாகுளம் அரசுப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டு மாணவ, மாணவியரிடம் விசாரணை நடத்தினார்.