தமிழ்நாடு

ஜியோவிலும் தொடரும் பிரச்னை: வாடிக்கையாளர்கள் பீதி

ஜியோவிலும் தொடரும் பிரச்னை: வாடிக்கையாளர்கள் பீதி

Rasus

ஏர்செல்லை தொடர்ந்து ஜியோவின் தொடர்புகளிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நேற்று ஏற்பட்ட இந்த பிரச்னை இன்னும் முழுமையாக சரிசெய்யப்படவில்லை.

தமிழகம் முழுவதும் ஏர்செல் சிக்னல் கிடைப்பதில் கடந்த சில தினங்களாகவே பிரச்னை ஏற்பட்டது. இதனால் அதன் லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் சிரமத்திற்கு ஆளாகினர். ஏர்செல்லை நீண்ட காலமாகவே பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் கூட மற்ற நெட்வொர்கிற்கு மாற தொடங்கினர். இதனிடையே தங்களது நிறுவனத்தை திவால் என அறிவிக்கக்கோரி தேசிய கம்பெனிகள் சட்ட தீர்ப்பாயத்தில் ஏர்செல் மனு தாக்கல் செய்துள்ளது.

ஏர்செல் வாடிக்கையாளர்கள் ஒருபுறம் மற்ற நெட்வொர்கிற்கு மாறிக்கொண்டிருக்கும் நிலையில் ஜியோவும் நேற்று முதல் மக்கர் செய்யத் தொடங்கியது. அதன் இணையதள சேவையில் பெரும்பாலும் எந்தவித பிரச்னை இல்லையென்றாலும், ஜியோ அழைப்புகளை மேற்கொள்ள முடியவில்லை என அதன் வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்தனர். இந்த செய்தி சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவியதால் ஜியோ வாடிக்கையாளர்களும் பதற்றமடைந்தனர். இதற்கு ட்விட்டரில் பதிலளித்த ஜியோ, “எங்களது நெட்வொர்கில் சில இடங்களில் பிரச்னைகள் இருப்பது தெரியவந்துள்ளது. பிரச்னைகளை சரிசெய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். விரைவில் அவை சரிசெய்யப்படும். அதுவரை எங்களுடன் தொடர்பில் இருங்கள்” என்று கேட்டுக்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் இன்றும் ஜியோவின் தொடர்புகளில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பெரும்பாலானோருக்கு ஜியோவிலிருந்து கால் மற்றும் இணையதள வசதியை பெறுவதில் இன்று சிக்கல் இல்லையென்றாலும் ஒருசிலருக்கு இன்னும் பிரச்னை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஏர்செல் நெட்வொர்கிலிருந்து மாறியவர்கள் கூட ஒருசிலர் ஜியோவை தேர்வு செய்திருந்தனர். ஆனால் ஜியோவிலும் பிரச்னை இருக்கிறது. ஜியோவில் ஏற்பட்ட பிரச்னைக்கு இன்னும் முழுமையான காரணம் தெரியாததால் அதன் வாடிக்கையாளர்களும் சிரமத்துடன் அச்சமும் அடைந்துள்ளனர்.