கர்நாடகா மாநிலத்திற்கான சட்டப்பேரவை தேர்தலுக்கும், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என தலைமைத் தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளார்.
கர்நாடக மாநில சட்டப்பேரவைக்கான தேர்தல் தேதியை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஓம் பிரகாஷ் ராவத் இன்று அறிவித்தார். அதன்படி கர்நாடகாவில் மொத்தம் உள்ள 224 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக மே 12ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. மே 15ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. இதனையடுத்து தேர்தல் நடத்தை விதிகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன.
இதனிடையே கர்நாடகா மாநில சட்டப்பேரவை தேர்தலை காரணம் காட்டி காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் கர்நாடகா அரசு தள்ளிப்போடலாம் என கூறப்பட்டது. இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியத்திற்கும் கர்நாடகா மாநிலத்திற்கான சட்டப்பேரவை தேர்தலுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என தேர்தல் ஆணையர் தெளிவுப்படுத்தியுள்ளார். இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க தடையில்லை. நீதிமன்ற உத்தரவை பின்பற்றலாம் என்று தெளிவாக கூறிவிட்டார்.
காவிரி வழக்கில் கடந்த பிப்ரவரி மாதம் 16ம் தேதி தனது இறுதி தீர்ப்பை வழங்கிய உச்சநீதிமன்றம், மத்திய அரசு 6 வார காலத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என உத்தரவிட்டது. இந்த காலக்கெடுவின் கடைசி நாள் வருகிற 29-ந் தேதி ஆகும். ஆனால் தற்போது வரை காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படவில்லை.