தமிழ்நாடு

“தன்னார்வலர்களுக்கு தடையில்லை.. காவல்நிலையத்தில் அனுமதி பெறலாம்” - சென்னை ஆணையர்

“தன்னார்வலர்களுக்கு தடையில்லை.. காவல்நிலையத்தில் அனுமதி பெறலாம்” - சென்னை ஆணையர்

webteam

பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை வழங்க தன்னார்வலர்கள் காவல் நிலையங்களில் அனுமதி பெறலாம் என்று காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் கூறியுள்ளார்.

சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "காவல்துறைக்கு ஒத்துழைப்பு அளித்து வரும் மக்களுக்கு நன்றி. ஒரு சிலர் விதிகளை மீறி வருகின்றனர். இதுவரை 144 தடையை மீறியதற்காகவும், போக்குவரத்து விதிகளை மீறியதற்காகவும் 48,500 வழக்குகளுக்கு மேல் பதிவு செய்துள்ளோம். 23 ஆயிரத்திற்கும் மேல் நான்கு சக்கரவாகனங்கள், இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்துள்ளோம். பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியே வர வேண்டாம் என்பது காவல்துறையின் வேண்டுகோள்.

அந்தந்த பகுதிகளிலேயே அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்கிறது. வேறொரு பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். தன்னார்வலர்களும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உதவி செய்ய எந்த தடையும் விதிக்கவில்லை. உதவி செய்து வரும் அவர்களின் தொண்டு போற்றுதலுக்குரியது. அவர்களது சேவையை மதிக்கிறோம். தொண்டு செய்வதற்கு வழிமுறை மட்டுமே மாற்றப்பட்டுள்ளது. 144 தடை உத்தரவுக்கு அர்த்தமில்லாமல் போய் விடக்கூடாது என்பதற்காக தான் வழிமுறை மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. அவர்களுடைய பாதுகாப்பும் மிகவும் முக்கியமானது.

காவல்துறை, வருவாய் துறை, மாநகராட்சி அதிகாரிகள் மூலம் தன்னார்வலர்கள் உதவிகளை செய்யலாம். அவர்கள் அந்தந்த காவல்நிலையங்களையோ, மண்டல அலுவலகங்களையோ, ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள வருவாய்துறையினரையோ அணுகலாம். அவர்கள் மூலம் உதவிகளை செய்யலாம். பெண் காவலர்களுக்கு போதிய வசதிகளை செய்து கொடுத்துள்ளோம்" என்றார்.

தமிழக காவல்துறை சட்டம்-ஒழுங்கு கூடுல் டிஜிபி ஜெயந்த் முரளி செய்தியாளர்களிடம் கூறுகையில், "வாகனங்களுக்கு வழங்கப்படும் பாஸ்களை குறைக்க முடிவு செய்துள்ளோம். சில இடங்களில் தேவையில்லாத பாஸ்கள் வழங்கப்படுகிறது. அத்தியாவசிய பாஸ்கள், அவசர பாஸ்களை குறைக்க முடிவு செய்துள்ளோம்" என்றார். அத்துடன் டெல்லி மாநாட்டில் கலந்துகொண்டவர்களின் தொடர்பில் இருந்த 80% பேர் அடையாளம் காணப்பட்டுவிட்டதாகவும், அவர்கள் முழு ஒத்துழைப்பு தருவதாகவும் கூறினார்.

இதற்கிடையே சென்னை முழுவதும் மக்களை பாதுகாத்து வரும் காவல்துறையினருக்கு முக பாதுகாப்பு கவசம் (Face shield) வழங்கப்பட்டுள்ளது. இவற்றை தமிழக காவல்துறை சட்டம்-ஒழுங்கு கூடுதல் டிஜிபி ஜெயந்த் முரளி, சென்னை காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் ஆகியோர் வழங்கியுள்ளனர். மூக்கு, வாய், கண் பகுதிகளை பாதுகாக்கும் இந்த முக பாதுகாப்பு கவசம், வெளிபுறத்தில் முகம் முழுவதையும் பாதுகாக்கும் விதத்தில் இது தாயாரிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 3000 முக பாதுகாப்பு கவசங்கள் கொள்முதல் செய்யப்பட்டு அனைத்தும் சென்னை போக்குவரத்து போலீசாருக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும், 24 ஆயிரம் முக பாதுகாப்பு கவசங்களை தயாரித்து போலீசாருக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.