நெய்வேலியின் என்எல்சி-யில் மனித வள மேம்பாட்டுத்துறை அதிகாரி ஒருவர் பணத்திற்காக கடத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.
என்எல்சியில் மனித வளமேம்பாட்டுத்துறை அதிகாரியாக இருந்த அசோக் குமார் கடந்த ஏப்ரல் 23ம் தேதி திடீரென காணாமல் போனார். இது தொடர்பாக அவரது சகோதரர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். இதனிடையே அசோக் குமார் காணாமல்போன பிறகு அவரது வங்கிக்கணக்கில் இருந்து 13 லட்சம் ரூபாய் எடுக்கப்பட்டது தெரியவந்தது.
இதனையடுத்து வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டது குறித்து காவல்துறை விசாரணையை தொடங்கினர். அப்போது அசோக் குமாரின் நண்பர்கள் இருவரைப் பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில் பணத்திற்காக அவர் கடத்தி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. அவர்கள் அளித்த தகவல் அடிப்படையில் குறிஞ்சிப்பாடி அடுத்த பெத்தாங்குளத்தில் உள்ள மீன் குட்டையில் இருந்து அசோக்குமார் உடல் மீட்கப்பட்டது. அசோக் குமாரின் நண்பர்கள் இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.