தமிழ்நாடு

நிவர் புயல் இன்று இரவு கரையை கடக்கும் என கணிப்பு

நிவர் புயல் இன்று இரவு கரையை கடக்கும் என கணிப்பு

jagadeesh

தென்மேற்கு வங்கக்கடலில் உருவான 'நிவர்' புயல், தீவிர புயலாக மாறியது. நிவர் புயல் அதிதீவிர புயலாக மாறி இன்று இரவு கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

வங்கக் கடலின் மத்தியப் பகுதியில் கடந்த 21 -ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. 23-ஆம் தேதி உருவாகும் என்று சொல்லப்பட்ட நிலையில் இரண்டு நாட்கள் முன்கூட்டியே உருவானது. காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வடமேற்கு திசை நோக்கி கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது. அதற்கு பிறகு மேற்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. பின்னர் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டமாக உருவானது.

பின்னர்ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருமாறியதாக வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்தது. இந்த நிலையில், தற்போது நிவர் புயல், தீவிர புயலாக மாறியுள்ளது. 'நிவர் புயல்' மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நேற்று இரவு 11:30 மணிக்கு, கடலூருக்கு கிழக்கு தென்கிழக்கு திசையில் 310 கி.மீ தொலைவிலும், புதுவையில் இருந்து கிழக்கு தென்கிழக்கு திசையில், 320 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னையில் இருந்து தெற்கு தென்கிழக்கு திசையில், 380 கிலோ மீட்டர் தொலைவிலும் இருந்தது.

அடுத்த 2 மணி நேரத்தில் மேற்கு வடமேற்கு திடையில் நகரும் என்றும் அதன் பின்னர் வடமேற்கு திசையிலும் நகரும் என கூறப்பட்டுள்ளது. அடுத்த 8 மணி நேரத்தில், அதிதீவிர புயலாக மாறி காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே இன்று இரவு கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 130 முதல் 140 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீச வாய்ப்பு இருப்பதாகவும், காற்றின் வேகம் அதிகபட்சமாக மணிக்கு 155 கிலோமீட்டர் வரை எட்டக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, இன்று தமிழகம், புதுச்சேரி கடலோர மாவட்டங்களிலும், தமிழகத்தின் வட உள் மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய அதீத கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது. தஞ்சாவூர், திருவாரூர், நாகை, கடலூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. புதுச்சேரி, காரைக்காலிலும் அதீத கனமழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது.