தெற்கு வங்கக்கடலில் உருவாகியிருக்கும் நிவர் புயல் நாளை மாமல்லப்புரத்திற்கும் காரைக்காலுக்கும் இடையே கரையைக் கடக்கிறது என்பதால், வங்கக்கடலோர மாவட்ட மக்கள் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், நாகை மாவட்டத்தில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் இன்று பிற்பகலுக்குள் முகாம்களுக்கு வந்து சேர வேண்டும் என்று ஆட்சியர் பிரவீண் நாயர் அறிவுறுத்தியுள்ளார். மாவட்டத்தில் தாழ்வான பகுதிகளில், அதிக பாதிப்பை ஏற்படுத்தும் பகுதிகளை பேரிடர் கண்காணிப்பு அலுவலர் முனியநாதன், நாகை மாவட்ட ஆட்சியர் பிரவீண் நாயர் ஆகியோர் பார்வையிட்டனர்.
பிரவீண் நாயர் ஐ.ஏ.எஸ்
மேலும், செபஸ்தியார் நகர், சுனாமி குடியிருப்பு, பல்நோக்கு சேவை மையம் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆட்சியர், மாவட்டம் முழுவதும் 24 குழுக்கள் அமைக்கப்பட்டு புயல் பாதுகாப்பு மையங்கள், பல்நோக்கு மையங்கள் என 99 முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
தற்போது, 450 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் நிவர் புயலையொட்டி, நாகையில் 5 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.