தமிழ்நாடு

ரூ1000 கோடி சொத்துடைய காஞ்சி ஆதீன மடத்தில் நித்யானந்தா சீடர்கள் தலையிடக்கூடாது: உறுப்பினர்

ரூ1000 கோடி சொத்துடைய காஞ்சி ஆதீன மடத்தில் நித்யானந்தா சீடர்கள் தலையிடக்கூடாது: உறுப்பினர்

Sinekadhara

நித்யானந்தா சீடர்கள் இனி தொண்டை மண்டல ஆதீன மடத்தில் தங்கி மடத்தின் நடவடிக்கைகளில் பங்கு பெறக்கூடாது; மடாதிபதியின் இறுதிச்சடங்கு முடிந்தவுடன் நித்யானந்தா சீடர்கள் வெளியேற வேண்டும்; புதிதாக நித்யானந்தா சீடர்கள் யாரும் மடத்தில் அனுமதிக்கப்படமாட்டார்கள் என தொண்டை மண்டல ஆதீன மடத்தின் ஆலோசனைக்குழு உறுப்பினர் குப்புசாமி புதிய தலைமுறைக்கு பிரத்தியேக பேட்டியளித்துள்ளார்.

காஞ்சிபுரம் பரமசிவன் தெருவில் பழமை வாய்ந்த தொண்டைமண்டல ஆதீனம் ஞானபிரகாச மடம் உள்ளது. இந்த மடத்தின் 232-வது பட்டம் மடாதிபதியாக ஞானப்பிரகாச தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் உள்ளார். இவர் கடந்த 2008-ம் ஆண்டு முதல் ஆதீனமாக பொறுப்பேற்று செயல்பட்டு வருகிறார். மடத்துக்கு சென்னை, காஞ்சிபுரம், திருநெல்வேலி, மதுரை உட்பட தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சுமார் ரூ.1000 கோடி மதிப்பிலான சொத்துக்கள் உள்ளன.

இந்த நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரை சேர்ந்த நித்யானந்தா சீடர்கள் மடத்துக்குள் வந்தனர். அவர்கள் மடாதிபதிக்கு பணிவிடையும், சேவையும் செய்வதாகக் கூறி மடத்தில் தங்கி இருந்தனர். இந்நிலையில் கடந்த 19ம் தேதி மடாதிபதி ஞானபிரகாசம் சுவாமி தவறி கீழே விழுந்துள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அவர் உயிர் பிரிந்தது.

இதையடுத்து நித்யானந்தா சீடர்கள் இனி தொண்டை மண்டல ஆதீன மடத்தில் தங்கி மடத்தின் நடவடிக்கைகளில் பங்குபெறக்கூடாது என தொண்டை மண்டல ஆதீன மடத்தின் ஆலோசனைக்குழு உறுப்பினர் குப்புசாமி புதிய தலைமுறைக்கு பிரத்யேகமாக பேட்டி அளித்துள்ளார். நித்யானந்தா சீடர்கள் மடத்திற்கு வந்து ஆசிர்வாதம் வாங்குவதை நாங்கள் தடுக்க மாட்டோம். இதுதான் தற்போதைய நிலைப்பாடு. ஆயிரம் கோடி ரூபாய்க்குமேல் சொத்து உள்ள மடத்தின் தற்போதைய சொத்தை யாரும் அபகரிக்க முடியாது.

தற்போது அனைத்து சொத்துக்களும் பாதுகாப்பாக உள்ளது. இருப்பினும் மடத்தின் சொத்தை யாராவது அனுபவித்துக் கொண்டிருந்தால் அவர்களிடமிருந்து சொத்துக்களை மீட்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். மடாதிபதியின் இறுதிச்சடங்கு நிறைவடைந்தவுடன் மடத்திலிருந்து நித்யானந்தா சீடர்கள் தாமாகவே வெளியேறி விடுவதாக கூறி இருக்கிறார்கள்.

பல ஆண்டுகளாக மடத்தின் சொத்துக்கள் பல நபர்களால் அனுபவிக்கப்பட்டு வருகிறது. அதற்கு உண்டான எந்த ஒரு அடிப்படை வாடகையும் தற்போது வரை வரவில்லை. அதனை வசூலிப்பதற்காக நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தெரிவித்தார். நித்யானந்தாவின் சீடர்களால் ஏதேனும் பிரச்னை ஏற்பட வாய்ப்பு இருப்பதால் மடத்தின் கோரிக்கையை ஏற்று, போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும் என காவல்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.