ஜப்பானைச் சேர்ந்த பிரபல கார் நிறுவனமான நிசான் இந்தியாவில் ஆயிரத்து 700 பேரை பணியிலிருந்து அனுப்ப முடிவு செய்துள்ளது.
வாகன விற்பனையில் தொடரும் மந்தநிலை காரணமாக, மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ள சர்வதேச அளவில் நிசான் நிறுவனம் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அதன்படி ஆறாயிரம் பேர் வரை பணி நீக்கம் செய்யப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன் ஒரு பகுதியாக சென்னையில் உள்ள ரெனால்ட் - நிசான் ஆலையில் ஆயிரத்து 700 பேரின் பணி பாதிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. ஆனால் இதுபற்றி கருத்து தெரிவிக்க அந்நிறுவனம் மறுத்துவிட்டது.
வாகன விற்பனை துறை மந்தநிலையில் காணப்படுவதால் பல நிறுவனங்கள் உற்பத்தியைக் குறைத்து வருகின்றன. நிசான் நிறுவனத்தின் லாபம் 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்குக் குறைந்ததால், செலவினங்களைக் கட்டுப்படுத்த ஆட்குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.