தமிழ்நாடு

நீதிமன்ற வளாகத்தில் தியானத்தில் ஈடுபட்ட நிர்மலாதேவி 

நீதிமன்ற வளாகத்தில் தியானத்தில் ஈடுபட்ட நிர்மலாதேவி 

webteam

ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜரான பேராசிரியை நிர்மலாதேவி நீதிமன்றத்தை விட்டு வெளியேற மறுத்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து செல்ல முயலும் வகையில் அருப்புக்கோட்டை தனியார் கல்லூரியைச் சேர்ந்த உதவிப் பேராசிரியர் நிர்மலாதேவி மாணவிகளுடன் பேசிய தொலைபேசி உரையாடல் ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. 

இதனையடுத்து அவர் கடந்த ஏப்ரல் 17 ஆம் தேதி கைது செய்யப்பட்டு, மதுரை சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கை சிபிசிஐடி காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் மதுரை காமராஜர் கல்லூரி உதவிப் பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்புசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். பலமுறை அவருக்கு ஜாமீன் மறுக்கபட்டது. இதனைத்தொடர்ந்து மார்ச் மாதம் நிபந்தனையின் அடிப்படையில் நிர்மலா தேவிக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. 


இந்நிலையில், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் நிர்மலாதேவி இன்று ஆஜரானார். அப்போது இந்த வழக்கு விசாரணை வரும் 22 ஆம் தேதிக்கு ஓத்திவைக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து வெளியே வந்த அவர் நீதிமன்ற வளாகத்தில் சாமி வந்துள்ளதாக கூறி தியானத்தில் ஈடுபட்டார். அப்போது கண்களை மூடிக்கொண்டு “தனக்கு காலை 10 மணிக்கே தீர்ப்பு கிடைத்து, தான் விடுதலையாகி விட்டதாகவும், தனக்கு எதிராக குற்றம் சாட்டிய  மாணவிகள் தூக்குபோட்டு இறந்து விட்டதாகவும்” அவர் கூறினார். 

மேலும் நீதிமன்ற வளாகத்தில் பல்வேறு இடங்களில் அமர்ந்து கண்களை மூடிக் கொண்டு தியானத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.  பின்னர் பொதுமக்கள் அவரை சமாதானப்படுத்தி காரில் ஏற்றி வழி அனுப்பி வைத்தனர்.