நிர்மலா சீதாராமன்  கோப்பு புகைப்படம்
தமிழ்நாடு

தென்மாவட்ட மழை வெள்ள பாதிப்பு: “தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது” – நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்!

தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தார்.

webteam

மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய நேற்று தூத்துக்குடி சென்ற மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ள பாதிப்புகள் தொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின், தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மற்றும் அதிகாரிகளுடன், மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், எல்.முருகன் ஆகியோர் ஆலோசனை மேற்கொண்டனர்.

அப்போது, மழை வெள்ள பாதிப்புகள் தொடர்பாகவும், நிவாரணம் கோரியும் 72 பக்க அறிக்கை, தமிழக அரசு சார்பில், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, மாவட்டத்தில் வெள்ள பாதிப்புகளை அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது பொதுமக்களுடன் கலந்துரையாடி, அவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து அவர் கேட்டறிந்தார்.

தேசிய பேரிடராக இதை அறிவிக்க வேண்டும்என அமைச்சரிடம் ஒருவர் வேண்டுகோள் வைத்தபோது, அவருக்கு பதிலளித்த அமைச்சர் நிர்மலா சீதாராமன், சுனாமி காலத்தில் கூட, அதை தேசிய பேரிடராக அறிவிக்கவில்லை என தெரிவித்ததோடு, இந்த மழை வெள்ள பாதிப்புகளை தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார்.