Nirmala sitaraman  pt desk
தமிழ்நாடு

"கச்சத்தீவு குறித்து எப்போது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் பேசலாம்" - நிர்மலா சீதாராமன்

“வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளுக்காக சென்னைக்கு மத்திய அரசு வழங்கிய 5 ஆயிரம் கோடி நிதி எவ்வாறு செலவளிக்கப்பட்டது? மத்திய அரசுக்கு தமிழக அரசு விளக்கம் தர வேண்டும்” என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

webteam

செய்தியாளர்: விக்னேஷ்முத்து

2047 ஆம் ஆண்டுக்குள் முழுமையாக வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்கும் மத்திய அரசின் விக்ஷித் பாரத் திட்டம் குறித்து மாணவர்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் சென்னை பல்லாவரம் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பங்கு பெற்று உரையாற்றினார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், பல்வேறு விஷயங்கள் குறித்து விமர்சித்தார். அவற்றை காணலாம்...

“தேர்தலுக்காக கச்சத்தீவு குறித்து பேசவில்லை”

Kachchatheevu

“தேர்தலுக்காக கச்சத்தீவு குறித்து பாஜக பேசுவதாக கூற முடியாது. கச்சத்தீவு இந்தியாவின் இறையாண்மை , பாதுகாப்பு சம்பந்தப்பட்டது. இது குறித்து எப்போது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் பேசலாம். 1974ல் நடந்த விஷயத்தை இப்போது ஏன் பேச வேண்டும் என்று சிலர் கேட்கலாம். 50 ஆண்டுகளாக காங், திமுக கச்சத்தீவு குறித்து பொய் பிரசாரம் செய்து வருகிறது. அதுதான் ஆர்டிஐ மூலம் இப்போது வெளிவந்துள்ள முக்கிய விஷயம்.

கச்சத்தீவு குறித்து இப்போது பேசவேண்டாம் என்று கூறும் இவ்விருவரும், கச்சத்தீவு இலங்கைக்கு வழங்கப்பட்டபோதும் கூட்டணியில் இருந்தனர். இப்போதும் கூட்டணியில் இருக்கின்றனர். 1967 க்கு பிறகு காங். எனும் தேசிய கட்சியால் தமிழகத்தில் மீண்டும் ஆட்சிக்கு வர முடியவில்லை. அதன் வாக்கு வங்கியும் 4, 5 சதவீதமாக குறைந்து விட்டது.

நேரு கச்சத்தீவை ஒரு நச்சரிப்பு, தொல்லை, அதை விரைந்து மற்றவர்களிடம் கொடுத்துவிட வேண்டும் என்று குறிப்பிட்ட கடிதம் நம்மிடையே உள்ளது. இந்திரா காந்தி அதை வெறும் கற்பாறைகள் கொண்டது என்றார். கருணாநிதி அவர்கள் கூறிய கருத்துகளை எதிர்க்கவில்லை. 1974 லேயே வெளியுறவுத் துறை சார்பில் அப்போதைய முதல்வரிடம் கச்சத்தீவு குறித்து கூறி விட்டனர். திமுகவிற்குத் தெரியாமல் கச்சத்தீவு தாரைவாரக்கப்பட்டதாக 50 ஆண்டுகளாக தவறான பிரசாரம் நடந்து வந்தது.

கச்சத்தீவு குறித்து 21 கடிதம் தமிழக முதல்வரிடம் இருந்து பிரதமருக்கு எழுதப்பட்டுள்ளது. எனவே அதுகுறித்த பொய்யை சரிசெய்ய இப்போது உண்மையை வெளியிட்டுள்ளோம்.
நிர்மலா சீதாராமன்

‘10 ஆண்டுகளாக பாஜக என்ன செய்தது?’

10 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தோம் என்று கேட்கின்றீர்கள். கச்சத்தீவு குறித்து நீதிமன்றத்தில் ரிட் வழக்குகள் நிலுவையில் உள்ளன. அது விசாரணைக்கு வரும்போது மத்திய அரசின் நிலைப்பாடு தெரியும்.

தேர்தல் பத்திரத்தில் முறைகேடா?

திமுக தேர்தல் பத்திரம் மூலம் பணம் பெறவில்லையா என்ன..? தேர்தல் பத்திரம் மூலம் திமுகவுக்கு வந்த பணத்தில் 100 ரூபாயில் 90 ரூபாய் ஒரே நபரிடம் இருந்து வந்துள்ளது. அதையும் பார்க்கவேண்டியுள்ளதே...

Modi & Amit shah

மக்களவை தேர்தலில் ஏன் போட்டியிடவில்லை?

பாஜக-வில் நான் ஒரு தொண்டர்தான், கட்சி தீர்மானிக்கும் போதுதான் நான் தேர்தலில் போட்டியிட முடியும். நான் போட்டியிடாதது குறித்து தமிழக முதலமைச்சர் கருத்து தெரிவிக்கும் அளவு தீவிரமாக ஆர்வம் காட்டுவார் என நான் நினைக்கவில்லை. பாஜக சார்பில் போட்டியிட்டு பொன்.ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன் போன்றவர்கள் கடந்த காலங்களில் வெற்றி பெற்றுள்ளனரே. தோல்வி பயத்தால் நான் போட்டியிடவில்லை என்று கூறுவது தவறு.

‘மத்திய அரசு நிதியில் மாநில அரசு...‘

மத்திய அரசின் திட்டங்களில் தமிழக முதலமைச்சரின் படம் இடம் பெற்றுள்ளது. மத்திய அரசு நிதியில் செயல்படுத்தப்படும் திட்டங்களை மாநில அரசே செயல்படுத்துவதாக கூறுகின்றனர்.

2014 முதல் எத்தனை மீனவர்களை மீட்டுள்ளோம் என எங்களால் கூற முடியும். மீன்வள, வெளியுறவுத்துறை அமைச்சர்களை இணைத்து குழு அமைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன் மூலம் படகுகள் மீட்கப்பட்டு வருகின்றன. நாங்கள் ஒன்றுமே செய்யவில்லை என்றால் மீனவர்கள் கைது செய்யப்படும் போதெல்லாம் பிரதமருக்கு கடிதம் எழுதுவது ஏன்? 2014-ல் காங். கூட்டணியில் திமுக இருந்தபோது, 5 தமிழக மீனவர்கள் தூக்கில் ஏற்றப்பட இருந்தனர். அந்த 5 மீனவர்களையும் உயிருடன் அழைத்து வந்தது பிரதமர் மோடிதான்.

Boat

‘வருமான வரித்துறை கேட்டால் தவறா?'

எந்த கட்சியாக இருந்தாலும் வருமான வரித்துறை கேட்கும்போது முறையாக விளக்கம் அளிக்க வேண்டும். அரசியல் கட்சிகளுக்கு வரி இல்லை. ஆனால், ஆண்டுதோறும் நாங்கள் ஒரு அரசியல் கட்சி என்பதை வருமான வரித்துறைக்கு அந்த கட்சி முறையாக தெரிவிக்க வேண்டும். காங். அதைக் கூட செய்யவில்லை. வருமான வரித்துறை கேள்வி கேட்டால் அதை தவறு என்று சொல்ல முடியுமா? நீதிமன்றம் வரை சென்றார்கள், நீதிமன்றமும் முறையாக விவரம் கூறவில்லை என்றுதான் நீதிமன்றத்திலும் கூறி உள்ளனர்.

‘தமிழகத்துக்கு நிதி கொடுக்கவில்லையா மத்திய அரசு?’

தமிழகத்தில் மிக்ஜாம் புயல், மழை வந்தவுடனே 950 கோடி நிதி தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து தமிழக பேரிடர் நிவாரண நிதிக்கு வழங்கப்பட்டது. வெள்ள பாதிப்புகளை சீர்செய்ய சென்னைக்கு 5 ஆயிரம் கோடி நிதி முன்கூட்டியே வழங்கப்பட்டது. அதை சரியாக பயன்படுத்தி இருந்தால் சென்னை நகரம் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டிருக்காது. அந்த 5 ஆயிரம் கோடி எப்படி செலவிடப்பட்டது என்று தமிழக அரசு கூற வேண்டும்.

அது குறித்து தமிழக அமைச்சர்கள் மாறுபட்ட கருத்துகளை கூறி வருகின்றனர். 90 சதவீத பணிகள் முடிந்து விட்டதாக முதலில் கூறினர், பின்பு மறுத்தனர். மேலும் வெள்ள நிவாரண நிதி, உயர்நிலைக் குழுக் கூட்டத்திற்கு பிறகு தமிழக அரசுக்கு வழங்கப்படும்.

cm stalin chennai flood

‘தமிழகத்தில் போதைப்பொருள்கள் அதிகரிப்பது...’

தமிழகத்தில் போதைப் பொருள்கள் அதிகரிப்பது கண்ணீரை வருகிறது. ராமேஸ்வரம் அருகில் பிடிபட்ட போதைப் பொருள் கூட குஜராத்தில் இருந்து கொண்டுவரப்பட்டு இங்கு பிடிபட்டது என்று கூறுவார்களா? மீண்டும் மீண்டும் குஜராத்தை குற்றம் சாட்டுவதை மக்கள் நம்பமாட்டர். குஜராத்தில் போதைப் பொருள்கள் உடனுக்குடன் பிடித்து அவை பொதுவெளியில் எரிக்கப்பட்டு வருகின்றன.

‘கெஜ்ரிவால் போல அல்ல மோடி’

மோடி முதல்வராக இருந்தபோது தேர்தல் நேரத்தில் சிபிஐ அவரிடம் விசாரணை நடத்தியது, தேர்தல் சமயத்தில் அழைப்பது ஜனநாயக கேடு என அவர் கூறவில்லை, 8 மணி நேரம் ஆஜராகி பதில் அளித்தார். தண்ணீர் கூட குடிக்காமல் பதிலளித்தவர் மோடி. ஆனால் 8 முறை அழைப்பாணை அனுப்பியும் அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகவில்லை” என்று பேசினார்.