நிர்மலா தேவி விவகாரத்தில் புகார் கூறிய 4 மாணவிகளிடம் அதிகாரி சந்தானம் குழுவினர் விசாரணை நடத்தினர்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் கணிதப் பிரிவு பேராசிரியராக பணி புரிந்தவர் நிர்மலா தேவி. இவர் கல்லூரி மாணவிகளிடம் பேசிய தொலைப்பேசி உரையாடல் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. அதில் மதுரை பல்கலைக்கழக உயர் அதிகாரிகளின் பாலியல் ஆசைக்கு இணங்க மாணவிகளிடம் அவர் வலியுறுத்துவதாகவும், இதன்மூலம் பணம் கிடைக்கும் என்பன உள்ளிட்ட ஆசைகளை தூண்டியதாகவும் நிர்மலாதேவி மீது குற்றம்சாட்டப்பட்டது. இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்த, மாணவிகளை தவறாக வழி நடத்தியதாகக் கூறப்படும் பேராசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். நிர்மலா தேவி மீது அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இதனிடையே, ஆளுநர் அமைத்த விசாரணை குழு அதிகாரியான ஓய்வுப்பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானமும் தனது விசாரணையைத் தொடங்கியுள்ளார்.
அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரிக்கு சென்ற விசாரணை குழுவினர் பேராசிரியை நிர்மலா தேவி மீது புகார் அளித்த 4 மாணவிகளிடம் விசாரணை நடத்தினர். முன்னதாக 4 மாணவிகளும் தங்களது பெற்றோர்களுடன் கல்லூரிக்கு வந்தனர். அவர்களிடம் சந்தானம் தலைமையில் பேராசிரியர் கமலி, தியாகேஸ்வரி ஆகியோர் விசாரணை நடத்தினர். பேராசிரியையின் தொலைபேசி உரையாடல், தகவல் பரிமாற்றம் குறித்து நான்கு மாணவிகளிடமும் சந்தானம் குழுவினர் கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது.