தமிழ்நாடு

நிர்மலா தேவி வீட்டின் பூட்டு உடைப்பு ! ஆவணங்களை திருட நடந்த முயற்சியா ?

நிர்மலா தேவி வீட்டின் பூட்டு உடைப்பு ! ஆவணங்களை திருட நடந்த முயற்சியா ?

rajakannan

பேராசிரியை நிர்மலா தேவியின் வீட்டில் பூட்டை உடைத்து திருட முயற்சி நடந்துள்ளது. இதுதொடர்பாக 3 தனிப்படை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற புகாரில் நிர்மலா தேவி சிறையில் உள்ளார். இந்நிலையில் அருப்புக்கோட்டையை அடுத்த ஆத்திப்பட்டியிலுள்ள நிர்மலா தேவி வீட்டின் பூட்டு மற்றும் கதவை மர்ம நபர்கள் உடைத்துள்ளனர். இதுபற்றி அறிந்த காவல்துறையினர், நிர்மலா தேவியின் வீட்டில் ஆவணங்களை திருட நடந்த முயற்சியா அல்லது பொருட்களை திருட நடந்த முயற்சியா என விசாரித்து வருகின்றனர். இதற்காக 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதனிடையே, நிர்மலாதேவிக்கு வரும் 23ம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த 16 ம் தேதி கைது செய்யப்பட்ட நிர்மலா தேவி கடந்த 20 முதல் 25ம் தேதி வரை 5 நாட்கள் சி.பி.சி.ஐ.டி காவல் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். இதனை அடுத்து 25ஆம் தேதி முதல் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார். காவல் முடிந்து நிர்மலா தேவி இன்று விருதுநகர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது நிர்மலா தேவியின் நீதிமன்ற காவல் மேலும் 15 நாட்கள் அதாவது மே 23ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. நிர்மலா தேவியிடம் முழு விசாரணை நடைபெற்று விட்டதால் அவரை மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க திட்டம் இல்லை என சி.பி.சி.ஐ.டி காவல் துறையினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.