தமிழ்நாடு

“நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியை செய்யத் தயார்”-தமிழக கான்ஸ்டபிள் விருப்பம்

“நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியை செய்யத் தயார்”-தமிழக கான்ஸ்டபிள் விருப்பம்

webteam

நிர்பயா வழக்கு தூக்கு தண்டனை கைதிகளுக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்றும் பணியை தான் செய்யத் தயாராக இருப்பதாக தமிழ்நாட்டைச் சேர்ந்த கான்ஸ்டபிள் ஒருவர் விருப்பம் தெரிவித்துள்ளார். 

டெல்லியில் கடந்த 2012-ஆம் ஆண்டு ஓடும் பேருந்தில் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். இந்த வழக்கில் 5 பேர் மற்றும் ஒரு சிறுவன் கைது செய்யப்பட்டனர். இவர்களில் ஒருவர் சிறையில் இருக்கும்போது தற்கொலை செய்து கொண்டார். மற்ற நான்கு பேருக்கும் மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு  அளித்தது. இவர்களின் மரண தண்டனை இன்னும் நிறைவேற்றப்படவில்லை. 

இந்நிலையில் இவர்களின் தூக்கு தண்டனையை நிறைவேற்ற தான் தயாராக இருப்பதாக தமிழ்நாட்டைச் சேர்ந்த சுபாஷ் ஸ்ரீனிவாசன் டெல்லி திகார் சிறையின் தலைமை காவலருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், “நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள குற்றவாளிகளின் தண்டனையை நிறைவேற்ற நபர் இல்லை என்று கேள்விப் பட்டேன். அந்த வேலையை செய்ய எனக்கு விருப்பமாக உள்ளது. இந்த வேலைக்கு எனக்கு ஊதியம் தேவையில்லை. இதுபோன்ற கொடூர சம்பவங்கள் செய்பவர்கள் மரண தண்டனையிலிருந்து தப்பிக்க முடியாது என்று மக்கள் மனதில் பதிய வைக்கவேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். 

(எஸ்.சுபாஷ் ஸ்ரீனிவாசன்)

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர் எஸ்.சுபாஷ் ஸ்ரீனிவாசன்(42). இவர் கடந்த 1997ஆம் ஆண்டு காவல்துறையில் பணியில் சேர்ந்தார். தற்போது இவர் தமிழக காவல்துறையில் தலைமை கான்ஸ்டபிளாக பதவியில் உள்ளார்.  இவர் அவ்வப்போது சமூக சேவை செயல்களிலும் ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் இவர் சாலை ஓரத்திலுள்ள மரங்களிலுள்ள ஆணிகளை அகற்றி பிரபலம் அடைந்தார். இவர் கடந்த இரண்டு ஆண்டுகளில் சாலை ஓரத்திலுள்ள 1000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்களிலிருந்து 100 கிலோ மதிக்கத்தக்க ஆணிகளை  அகற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.