ooty hill train pt desk
தமிழ்நாடு

மேட்டுப்பாளையம்: மண் சரிவால் தடைபட்டிருந்த நீலகிரி மலை ரயில் சேவை மீண்டும் துவக்கம்...

மேட்டுப்பாளையத்தில் கன மழையால் ஏற்பட்ட மண் சரிவு காரணமாக தடைபட்டிருந்த மலை ரயில் சேவை மீண்டும் துவங்கியுள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

webteam

செய்தியாளர்: இரா.சரவணபாபு

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து உதகைக்கு தினசரி காலை 7.10 மணிக்கு நீலகிரி மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. நூற்றாண்டு பழமை வாய்ந்த இந்த மலை ரயிலில் பயணித்தபடி நீலகிரி மலையின் இயற்கை அழகை கண்டு ரசிக்க உள்நாடு மட்டுமின்றி பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம்.

ooty hill rail

இந்நிலையில், கனமழை காரணமாக இதன் தண்டவாள பாதையில் மண் சரிவு ஏற்பட்டிருந்தது. இதனால் கடந்த 18 ஆம் தேதி முதல் நேற்று 21 ஆம் தேதி வரை நான்கு நாட்கள் மலை ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. தொடர்ந்து சீரமைப்பு பணிகள் முடிந்த நிலையில், கடந்த 22 ஆம் தேதி மலை ரயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டது. ஆனால் தொடர் மழையால் மீண்டும் ஏற்பட்ட மண் சரிவு காரணமாக நேற்று (மே 23) மலை ரயில் சேவை மீண்டும் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்தது.

இந்நிலையில், சீரமைப்பு பணிகள் முழுமையாக முடிவடைந்த நிலையில் இன்று (மே 24) காலை வழக்கம் போல் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு மலை ரயில் போக்குவரத்து தொடங்கியது. வழக்கமாக காலை 7.10 மணிக்கு புறப்படும் மலை ரயில் இன்று இருபது நிமிடங்கள் தாமதமாக 7.30 மணி மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து உதகை நோக்கி புறப்பட்டது. ஏற்கனவே முன்பதிவு செய்து காத்திருந்த சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் மலை ரயிலில் பயணித்தனர்.