தமிழ்நாடு

நீலகிரி: உயிரை பணயம் வைத்து உயிரை காக்கும் சுகாதார பணியாளர்கள்

நீலகிரி: உயிரை பணயம் வைத்து உயிரை காக்கும் சுகாதார பணியாளர்கள்

kaleelrahman

யானைகள் நடமாட்டம் உள்ள பழங்குடியின கிராமங்களுக்கு செல்போன் டார்ச் வெளிச்சத்தில் சென்று, மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணியில் சுகாதாரத் துறை பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள பழங்குடியின மக்களுக்கு 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை மாவட்ட நிர்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது. அதன்படி சுகாதாரத் துறை பணியாளர்கள், வருவாய்த் துறையினர் என அரசுத்துறை அதிகாரிகள், பழங்குடியின கிராமம் கிராமமாக சென்று மக்களுக்கு தடுப்பூசிகளை போட்டு வருகிறார்கள். பல பழங்குடியினர் கிராமங்களில் தடுப்பூசி போட்டுக்கொள்ள பயந்து மக்கள் வனப்பகுதிகளிலும், வீடுகளுக்குள்ளும் பதுங்கிக் கொள்ளும் சம்பவங்களும் ஒரு பக்கம் நிகழ்ந்த வண்ணமே உள்ளன.

பகல் நேரங்களில் சுகாதாரத்துறையினர் வருவதை கண்டு பழங்குடியின மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள பயந்து பதுங்கிக் கொள்கின்றனர். இந்த நிலையில் சுகாதாரத் துறை பணியாளர்கள் இரவு நேரங்களில் பழங்குடியினர் கிராமங்களுக்கு சென்று மக்களுக்கு தடுப்பூசிகளை போட்டு வருகிறார்கள். அந்த வகையில் நேற்று இரவு பந்தலூர் அருகே உள்ள கடலக்கொல்லி பழங்குடியினர் கிராமத்திற்கு இரவு சுமார் 7 மணியளவில் தடுப்பூசி போடுவதற்காக சென்றனர்.

சுகாதாரத் துறை பணியாளர்கள் வருவதை அறிந்த பழங்குடியின மக்கள் பல்வேறு இடங்களில் சென்று பதுங்கிக் கொண்டனர். இதனால் அந்த கிராம மக்களுக்கு தடுப்பூசி போட முடியவில்லை. பின்னர் அங்கிருந்து யானைகள் நடமாட்டம் உள்ள எருமைபள்ளம் பழங்குடியினர் கிராமத்திற்கு வனத்துறை உதவியுடன் செல்போன் டார்ச் வெளிச்சத்தில் சென்றனர். அங்கு உள்ள சுமார் 11 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. இருப்பினும் அங்கு இருந்தும் சிலர் தடுப்பூசிக்கு பயந்து தப்பி சென்று பதுங்கிக் கொண்டனர்.