தமிழ்நாடு

நீலகிரி: இறந்த யானைக்குட்டியை பாதுகாத்து நிற்கும் பெண் யானைகள்: குட்டியை மீட்பதில் தாமதம்

நீலகிரி: இறந்த யானைக்குட்டியை பாதுகாத்து நிற்கும் பெண் யானைகள்: குட்டியை மீட்பதில் தாமதம்

kaleelrahman

கூடலூர் அருகே தனியார் தேயிலைத் தோட்டத்தில் சேற்றில் சிக்கி யானைக் குட்டி பரிதாபமாக உயிரிழந்தது. தாய் உள்ளிட்ட 2 பெண் யானைகள், வனத்துறையினரை அருகே நெருங்க விடாமல் நிற்பதால் இறந்த யானைக் குட்டியை மீட்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள செம்பாலா பகுதியில் தனியார் தேயிலைத் தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் இன்று காலை வழக்கத்திற்கு மாறாக இரண்டு பெண் யானைகள் நடமாடியதை தொழிலாளர்கள் பார்த்துள்ளனர். இதுகுறித்து கூடலூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதைத்தொடர்ந்து அப்பகுதிக்குச் சென்ற வனத்துறையினர் யானைகளை விரட்ட முயன்றபோது அது வனத்துறையினரை திரும்ப விரட்டி இருக்கிறது. சந்தேகம் அடைந்த வனத்துறையினர் தூரத்தில் நின்று யானைகள் நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர். அப்போது யானைகள் நின்ற பகுதியில் உள்ள ஓடையில், சேற்றில் சிக்கி யானைக்குட்டி ஒன்று இறந்து கிடப்பது தெரியவந்தது.

இதன் காரணமாகவே இரண்டு யானைகளும் அதே பகுதியில் நின்றதும் தெரியவந்தது. இரண்டு யானைகளும் வனத்துறையினரை இறந்த யானைக்குட்டி அருகே நெருங்க விடாமல் பாதுகாப்பிற்கு நின்று வருகின்றன. இதனால் இறந்த யானைக்குட்டியை பிரேத பரிசோதனை மேற்கொள்வதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.

இரண்டு யானைகளும் தாமாக அப்பகுதியை விட்டு செல்லும் வரை அவற்றை தொந்தரவு செய்ய வேண்டாம் என வனத்துறை உயர் அதிகாரிகள் அறிவுறுத்துகிறார்கள். இதன் காரணமாக வனத்துறையினர் அப்பகுதியில் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.