தமிழ்நாடு

நீலகிரி: நண்பர்களுடன் கேரள வனப் பகுதிக்குள் வேட்டைக்குச் சென்ற காவலர் பணியிடை நீக்கம்

நீலகிரி: நண்பர்களுடன் கேரள வனப் பகுதிக்குள் வேட்டைக்குச் சென்ற காவலர் பணியிடை நீக்கம்

kaleelrahman

கேரள வனப்பகுதிக்குள் துப்பாக்கியுடன் வேட்டைக்குச் சென்ற கூடலூர் காவலரை மாவட்ட எஸ்பி பணியிடை நீக்கம் செய்துள்ளார்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள எருமாடு காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருபவர் சிஜு. இவர், கடந்த 9 ஆம் தேதி நள்ளிரவு கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள முத்தங்கா வனப் பகுதிக்குள் நண்பர்களுடன் மற்றும் வேட்டை துப்பாக்கியுடன் வனவிலங்குகளை வேட்யாடச் சென்றிருக்கிறார். இந்நிலையில், வனப் பகுதிக்குள் புலிகள் நடமாட்டத்தை கண்காணிக்க பொருத்தப்பட்டிருந்த தானியங்கி கேமராக்களில் இவரது உருவம் பதிவாகி உள்ளது.

இதையடுத்து கேமராவில் இருந்து ஒளி வந்ததை அறிந்த மற்றவர்கள் அங்கிருந்து தப்பியோடி இருக்கிறார்கள். வனப்பகுதிக்குள் வழிதவறிய சிஜு மற்றும் அவரது நண்பர்களை ஊர் மக்கள் பிடித்துள்ளனர். பின்னர், காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்ட சிஜுவிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர், தமிழக காவல் துறையில் பணியாற்றி வருவதாக கூறியதை அடுத்து விடுவிக்கப் பட்டிருக்கிறார்.

இந்த நிலையில் கேரள வனத்துறையினர் சம்பவம் நிகழ்ந்து 10 நாட்களுக்குப் பிறகு கேமராவில் பதிவான புகைப்படங்களை ஆய்வு செய்தபோது அதில் சிஜு துப்பாக்கியுடன் வனப்பகுதிக்குள் சென்றது தெரியவந்தது. முதற்கட்டமாக விசாரணை மேற்கொண்ட கேரள வனத் துறையினர் அடையாளம் தெரியாத நபராக குறிப்பிட்டு விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இதையடுத்து கூடலூர் காவல் துறையினருக்கு அந்த புகைப்படங்களை அனுப்பி விசாரணை மேற்கொண்டபோது தான், புகைப்படத்தில் இருப்பவர் எருமாடு காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலர் சிஜு என்பது தெரியவந்தது. புகைப்படத்தில் இருப்பவர் காவலர் சிஜு என்பது உறுதியான நிலையில் அவரை மாவட்ட எஸ்பி ஆஷிஸ் ராவத் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டிருக்கிறார்.

சிஜு தற்போது தலைமறைவாக உள்ள நிலையில், அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு அதற்கான ஆணையை அவரது வீட்டில் அதிகாரிகள் வழங்கியிருக்கிறார்கள்.