village women pt desk
தமிழ்நாடு

நீலகிரி: மோட்டார் இருக்கு கரண்ட் இல்ல - அடிப்படை வசதியின்றி அவதிப்படும் பழங்குடியின கிராம மக்கள்

கூடலூர் அருகே சாலை, மின்சாரம், குடிநீர் என அடிப்படை வசதியின்றி பல ஆண்டுகளாக அவதிப்பட்டு வரும் பழங்குடியின கிராம மக்கள். தண்ணீர் எடுப்பதற்காக காட்டு யானைகள் நடமாட்டம் உள்ள பகுதிக்கு சென்று வரும் நிலையில் தற்போதும் உள்ளனர்.

webteam

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள நெலாக்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட அவுன்டேல் பகுதியில் உள்ளது கொட்டாய்மேடு பழங்குடியினர் கிராமம். இந்த பழங்குடி கிராமத்தில் 48 குடும்பத்தினர் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வருகிறார்கள். முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியை ஒட்டியுள்ள இந்த கிராம மக்கள் பல ஆண்டுகளாக சாலை, மின்சாரம், குடிநீர் மற்றும் வீடு உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் இன்றி தவித்து வருகிறார்கள். 'காட்டு யானைகள் அதிகளவில் வந்து செல்லக்கூடிய இந்த கிராமத்தில் அடிப்படை வசதிகள் இல்லாததால் மக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள்.

House

இந்த கிராமத்தை சேர்ந்த பழங்குடியின மக்களுக்கு அரசின் மூலம் இலவச தொகுப்பு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த வீடுகளும் தரமற்ற முறையில் கட்டப்பட்டுளளதால் மழைக்காலத்தில், மழைநீர் கசிவு ஏற்பட்டு வீட்டிற்குள் குடியிருக்க முடியாத நிலை இருப்பதாக கிராம மக்கள் கூறுகின்றனர். கிராமத்திற்கு மின்சார வசதி இல்லாத காரணத்தால், அரசு மூலம் கட்டி கொடுக்கப்பட்ட வீட்டிற்கு சோலார் மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த சோலார் மின் விளக்குகளும் வெயில் அதிகமாக உள்ள நாட்களில் பகலில் மட்டுமே சுமார் ஒருமணி நேரம் எரிவதாக மக்கள் கூறுகின்றனர். இரவு நேரத்தில் சோலார் மின் விளக்குகளை பயன்படுத்த முடியாத நிலை இருப்பதாகவும் கூறுகின்றனர்.

அதேபோல கடந்த ஓராண்டிற்கு முன்பு இந்த கிராம மக்கள் பயன்பெறும் வகையில் அப்பகுதியில் தண்ணீர் தேக்கத் தொட்டி மற்றும் அங்குள்ள குடிநீர் கிணற்றில் குடிநீர் மின் மோட்டார் பொருத்திக் கொடுக்கப்பட்டது. கிராமத்திற்கு மின்சார இணைப்பு இல்லாத சூழலிலும் பெயரளவிற்கு மின் மோட்டார்களை பொருத்தி அதற்கு மின் இணைப்பு கொடுக்காமல் அதிகாரிகள் விட்டுள்ளனர். கிராமத்தில் தண்ணீர் தேக்கத் தொட்டி, குடிநீர் கிணற்றில் மின் மோட்டார் ஆகியவை இருந்தும் மின்சார வசதி இல்லாத காரணத்தால் கிராமத்திற்கு குடிநீர் பெற முடியாமல் உள்ளது.

Solar

இதன் காரணமாக கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் காட்டு யானைகள் அதிகம் நடமாட்டம் உள்ள வயல் பகுதிக்கு சென்று அங்கிருந்து ஆபத்தான முறையில் தண்ணீர் எடுத்து பயன்படுத்தி வருகிறார்கள். அதுவும் வீட்டில் உள்ள ஆண்கள் வேலைக்கு சென்று வீடு திரும்பிய பின்பு அவர்கள் துணியுடன் பெண்கள் தண்ணீர் எடுக்க வயல் பகுதிக்கு செல்கிறார்கள். எனவே அதிகாரிகள் தங்கள் கிராமத்தில் ஆய்வு செய்து சாலை மின்சாரம் குடிநீர் உள்ளிட்டு அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.