NIA pt desk
தமிழ்நாடு

கோவை: இந்து முன்னணி பிரமுகர் கொலை வழக்கு – குற்றவாளியின் சொத்தை பறிமுதல் செய்த NIA

webteam

செய்தியாளர்: சுரேஷ்குமார்

கோயம்புத்தூர் இந்து முன்னணி செய்தித் தொடர்பாளர் சி.சசிகுமார் என்பவர் கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 22-ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் செல்லும் பொழுது மர்ம கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை முதலில் தமிழக காவல்துறை விசாரித்து வந்த நிலையில், இந்த வழக்கில் பயங்கரவாதிகளுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்ததை அடுத்து தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டது.

Sasikumar

சசிகுமார் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சதாம் உசேன், சுபைர், முபாரக் மற்றும் ரபீகுல் ஹாசன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, சென்னை பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 5 பேர் மீதும் ஏற்கனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புச் சேர்ந்த சுபைர், 2012-ஆம் ஆண்டு வாங்கிய தனது சொத்தை, தான செட்டில்மென்ட் பத்திரம் மூலம் தனது தாயாருக்கு 2020-ஆம் ஆண்டு மாற்றிக் கொடுத்தது தெரியவந்தது. சுபைர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பிறகு இந்த இடமாற்றம் நடந்ததால், அந்த சொத்தை பறிமுதல் செய்ய தேசிய புலனாய்வு முகமை நடவடிக்கை மேற்கொண்டது.

இதற்காக பூந்தமல்லியில் உள்ள என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் தேசிய புலனாய்வு முகமை மனு தாக்கல் செய்தது. இதனை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் சுபைர் தனது தாயார் பெயருக்கு மாற்றிய நிலத்தை பறிமுதல் செய்ய உத்தரவிட்டது. இதன்படி தேசிய புலனாய்வு முகமை அந்த நிலத்தை தற்போது பறிமுதல் செய்துள்ளது.