கருக்கா வினோத்  pt web
தமிழ்நாடு

கருக்கா வினோத் மீது தேசிய புலனாய்வு முகமை வழக்குப்பதிவு; விசாரணை தொடக்கம்

ஆளுநர் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில், ரவுடி கருக்கா வினோத் மீது தேசிய புலனாய்வு முகமை வழக்குப்பதிவு செய்துள்ளது.

PT WEB

கடந்த அக்டோபர் 25ஆம் தேதி ஆளுநர் மாளிகை முன்பு சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்த ரவுடி கருக்கா வினோத் பெட்ரோல் குண்டு வீசினார். இதைத் தொடர்ந்து இந்த பெட்ரோல் குண்டு வீச்சு மற்றும் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு சூழல் குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி மத்திய உள்துறைக்கு விரிவான அறிக்கை அனுப்பியதாக கூறப்படுகிறது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின் பேரில் பெட்ரோல் குண்டு வீச்சு வழக்கை தேசிய புலனாய்வு முகமை கையில் எடுத்தது.

ஆளுநர் ரவி மத்திய உள்துறைக்கு அனுப்பிய அறிக்கையில், கருக்கா வினோத்தின் பின்புலம் குறித்து விளக்கமாக எடுத்துரைத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் இந்த விவகாரத்தை தேசிய புலனாய்வு முகமை விசாரணைக்கு மத்திய உள்துறை அனுப்பியுள்ளது.

ரவுடி கருக்கா வினோத், சென்னை புழல் சிறையில் இருந்தபோது, அங்கு 'பாப்புலர் ஃப்ரன்ட் ஆப் இந்தியா' அமைப்பினரோடு பழக்கம் ஏற்பட்டதாகவும் அவர் சிறையிலிருந்து வெளியே வந்த பின்னர் வேறு சில அமைப்புகளுடன் தொடர்பு ஏற்படுத்தி இருக்கலாம் எனவும் சந்தேகம் எழுந்துள்ளது.

கருக்கா வினோத் மீது வெடிபொருள் தடுப்புச் சட்டம், கூட்டுச்சதி உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ள தேசிய புலனாய்வு முகமை விசாரணையை தொடங்கி இருக்கிறது.