தடைசெய்யப்பட்ட அமைப்புக்கு ஆட்சேர்ப்பு pt
தமிழ்நாடு

சென்னை | தடைசெய்யப்பட்ட அமைப்புக்கு ஆட்சேர்ப்பு பிரசங்கம்.. என்.ஐ.ஏ நடத்திய திடீர் சோதனை!

தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு ஆட்சேர்ப்பில் ஈடுபடுவதற்காக பிரசங்கம் நடத்திய இடத்தில் என்.ஐ.ஏ சோதனை நடத்தியுள்ளது.

PT WEB

சென்னையில் கடந்த மே மாதம் டாக்டர் அமித் உசேன் டாக்ஸ் என்ற பெயரில் யூடியூப் மூலமாக பல்வேறு வீடியோக்களை வெளியிட்டு தடை செய்யப்பட்ட அமைப்பிற்கு ஆட்கள் சேர்த்ததாக சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் ஆறு நபர்களை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட டாக்டர் ஹமீது உசேன், அவரது தந்தை அகமது மன்சூர், அவரது சகோதரர் அப்துல் ரகுமான் உட்பட ஆறு பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இவர்கள் ராயப்பேட்டை ஜானி ஜான் கான் தெருவில் மாடர்ன் எஸ்சென்ஷியல் எஜுகேஷன் டிரஸ்ட் என்ற அமைப்பை நடத்தி அதன் மூலமாக தீவிரவாத இயக்கத்திற்கு ஆட்சேர்ப்பு பிரசங்கம் நடத்தி இருப்பதும் விசாரணையில் தெரிய வந்தது.

இதனையடுத்து இவர்கள் மீது ஊபா(UAPA) சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டதால், வழக்கானது என்.ஐ.ஏவிற்கு மாற்றப்பட்டு ஆவணங்கள் அனைத்தும் ஒப்படைக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக கடந்த ஜூன் மாதம் என்.ஐ.ஏ அதிகாரிகள் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 12 இடங்களில் சோதனை மேற்கொண்டு பல முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர். மேலும் சம்பந்தப்பட்ட யூடியூப் மற்றும் Whatsapp குரூப்களை ஆய்வு செய்து அதில் உள்ள நபர்களை விசாரணை செய்ததாகவும் கூறப்படுகிறது.

திடீரென நடத்தப்பட்ட சோதனை..

இந்த நிலையில் ராயப்பேட்டை ஜானி ஜானி கான் தெருவில் டாக்டர் அமீது உசேன் நடத்தி வந்த டிரஸ்ட் இடத்தில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சுமார் 6 க்கும் மேற்பட்டோர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

சோதனையில், அந்த இடத்தில் பிரசங்கம் நடக்கும் போது எத்தனை பேர் பங்கேற்க முடியும்? எவ்வளவு வாகனங்கள் நிறுத்த முடியும் என இன்ச் டேப் மூலமாக பில்டிங்கை அளவிட்டு பார்த்து சென்றனர். பிரசங்கம் நடத்திய போது அந்த மீட்டிங்கில் யார் யாரெல்லாம் பங்கேற்றனர்? எத்தனை வருடங்களாக கூட்டம் நடத்தி வந்துள்ளனர் என்ற விவரங்களையும் பெற்றுச்சென்றனர்.

இந்த தகவல்களை அடிப்படையாக வைத்து அடுத்தக்கட்ட விசாரணையை தொடங்கவுள்ளதாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.