சென்னையில் சிட்டலபாக்கம், வண்டலூர், வெட்டுவாங்கேணி, திருவல்லிக்கேணி, ஏழு கிணறு, நன்மங்கலம், ராயப்பேட்டை வண்ணாரப்பேட்டை, நீலாங்கரை ஆகிய 9 இடங்களிலும், கன்னியாகுமரியில் ஒரு இடத்திலும் இன்று காலை முதல் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
ஏற்கெனவே உலக நாடுகளால் தடை செய்யப்பட்ட 'ஹிஸ்ப்-உத் தஹ்ரிர்' அமைப்பு விவகாரம் தொடர்பாக இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் இதுவரை 9 நபர்களை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
முதல் வழக்கானது கடந்த ஜூன் மாதம் 30 ம் தேதி தஞ்சை, புதுக்கோட்டை, திருச்சி, கும்பகோணம் உட்பட தமிழகம் முழுவதும் பத்து இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டபோது போடப்பட்டது. இதில் ஹிஸ்புத் தஹிரிர் அமைப்பு தொடர்பாக தஞ்சாவூரைச் சேர்ந்த அப்துல் ரகுமான், முஜிபுர் ரஹ்மான் (எ) முஜிபுர் ரஹ்மான் அல்தான் சாஹிப் ஆகிய இருவரை கைது செய்தனர். இதே வழக்கில் ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதி பெங்களூரு விமான நிலையத்தில் வைத்து அஜீஸ் அகமது என்ற நபரையும் கைது செய்தனர்.
இதையடுத்து சென்னை சைபர் கிரைம் போலீசார் பதிந்த வழக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளுக்கு மாற்றப்பட்டு, 'ஹிஸ்ப்-உத் தஹ்ரிர்' அமைப்பு தொடர்பாக இரண்டாவது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதில் ராயப்பேட்டையைச் சேர்ந்த டாக்டர் ஹமீது உசேன், அவரது தந்தை மன்சூர், சகோதரர் அப்துல் ரகுமான் அவர்களது நண்பர்களான முகமது மாரீஸ், காதர் நவாஸ் ஷெரீப், அகமது அலி உமாரி ஆகிய 6 நபர்களை கைது செய்து 6 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டனர்.
குறிப்பாக ‘சென்னையில் எங்கெல்லாம் ஒருங்கிணைப்புக் குழு நடத்தப்பட்டது; அதன் மூலம் 'ஹிஸ்ப்-உத் தஹ்ரிர்' அமைப்புக்கு ஆட்கள் சேர்க்கப்பட்டது’ என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்படுள்ளது. இதையடுத்தே இன்று காலை முதல் அடுத்தகட்ட சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.