இலங்கை பயங்கரவாத தாக்குதலை நடத்திய முக்கிய குற்றவாளியுடன் தொடர்பில் இருந்ததாக கோவையை சேர்ந்தவர்கள் என்ஐஏ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஏப்ரல் மாதம் ஈஸ்டர் பண்டிகையின்போது இலங்கையில் அடுத்தடுத்து நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பு சம்பவம் உலகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பாக கோவை உக்கடத்தைச் சேர்ந்த முகமது அசாருதீன், அகரம் சிந்தா, சதாம் உசேன், ஷேக் இதையத்துல்லா, இப்ராகீம், அபுபக்கர் ஆகிய 6 பேரின் வீடு மற்றும் அலுவலகங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது இலங்கையில் தற்கொலை படை தாக்குதல் நடத்தி உயிரிழந்த ஜெஹ்ரன் ஹாஸ்மினுடன் முகமது அசாருதீன், ஷேக் இதயத்துல்லா ஆகியோர் தொடர்பில் இருந்தாக கூறி கைது செய்யப்பட்டனர்.
இதனையடுத்து தாக்குதல் நடத்திய ஜெக்ரன் ஹாஸ்மினுடன் சமூக வலைத்தளம் மூலம் நண்பர்களாக இருந்ததும், தகவல்களை பரிமாறிக்கொண்டதும் என்ஐஏ விசாரணையில் தெரியவந்தது. ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் கருத்துகளை தமிழாக்கம் செய்து வீடியோ மற்றும் புகைப்படங்களாக இணையத்தில் பரப்பி வந்ததுடன், துண்டு பிரசுரங்களாக விநியோகித்து வந்ததாகவும், ஐஎஸ் இயக்கத்திற்கு இளைஞர்களை சேர்க்கும் பணியில் அவர்கள் ஈடுபட்டு வந்ததாகவும் என்ஐஏ அதிகாரிகள் கூறுகின்றனர். மேலும், தடை செய்யப்பட்டுள்ள சிமி உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளுடன் அவர்கள் தொடர்பில் இருந்ததாகவும், கோவையை மையமாக கொண்டு கேரளா, தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் இதுவரை இல்லாத அளவில் தாக்குதல் நடத்த பயங்கரவாத அமைப்புகள் திட்டமிட்டிருந்ததாகவும் அதிர்ச்சி தகவல்களை விசாரணை நடத்திய அதிகாரிகள் கூறுகின்றனர். அதற்காக சமூக வலைத்தளங்கள் மற்றும் இணையத்தளங்களே இவர்களுக்கு கருவியாக பயன்பட்டு வருவதாகவும் விசாரணை நடத்திய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் கோவை, மதுரையை தொடர்ந்து சென்னை புழல் சிறையிலும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பன்னா இஸ்மாயில், போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. சுமார் ஐந்தரை மணி நேரம் நீடித்த விசாரணையில், இலங்கையில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து அவர்களிடம் கேள்விகள் எழுப்பப்பட்டதாக தெரிகிறது. இலங்கையில் குண்டு வெடிப்பு நிகழ்த்தியவர்களுடன் தொடர்பில் இருந்ததாக கோவையில் இரண்டு பேரை என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்தனர். இதேபோல் மதுரையில் அதிகாரிகள் சோதனை நடத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.