தமிழ்நாடு

டெல்லியில் கைது செய்யப்பட்ட 14 பேருக்கு நீதிமன்றக் காவல்

டெல்லியில் கைது செய்யப்பட்ட 14 பேருக்கு நீதிமன்றக் காவல்

webteam

டெல்லியில் கைதான 14 பேரை என்ஐஏ அதிகாரிகள் சென்னை பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். 

அன்சருல்லா என்ற பயங்கரவாத அமைப்பை தமிழகத்தில் உருவாக்க முயன்றதாக சென்னையைச் சேர்ந்த சையது புகாரி மற்றும் நாகையைச் சேர்ந்த ஹசன் அலி, ஹரிஷ் முகமது ஆகியோர் மீது சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டம் உள்பட 9 பிரிவுகளின் கீழ் என்.ஐ.ஏ. வழக்குப்பதிவு செய்துள்ளது. இவர்களின் வீடு மற்றும் அலுவலகத்தில் நடைபெற்ற சோதனையில் செல்போன்கள், சிம்கார்டுகள், லேப்டாப்புகள், ஹார்டு டிஸ்க்குகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன. 

ஹசன் அலி மற்றும் ஹரிஷ் முகமதுவை கைது செய்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் நாகையில் இருந்து சென்னைக்கு அழைத்து வந்து பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர் ஜூலை 25ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். 

இந்நிலையில் இதே குற்றத்தின் அடிப்படையில் டெல்லியில் வைத்து 14 பேரை என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். 

இந்த 14 பேரும் சவுதி அரேபியாவில் இருந்து நாடுகடத்தப்பட்டு இந்தியாவுக்கு அனுப்பப்பட்டனர். பின்னர் சவுதி அரேபியா அரசு இந்திய அரசுக்கு தகவல் தெரிவித்தது. அன்சருல்லா என்ற அமைப்புடன் இவர்களுக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுந்திருக்கிறது. எனவே இவர்களை நாடு கடத்தியிருக்கிறோம். அவர்களை விசாரியுங்கள் என சவுதி அரேபிய அரசு தெரிவித்திருக்கிறது. 

இதன் தொடர்ச்சியாக மத்திய அரசு அவர்களை கைது செய்து விசாரிக்குமாறு என்.ஐ.ஏ அதிகாரிக்களுக்கு உத்தரவிட்டது. இதையடுத்து என்.ஐ.ஏ அதிகாரிகள் 14 பேரையும் டெல்லியில் வைத்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது 14 பேரை என்ஐஏ அதிகாரிகள்  சென்னை பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்களுக்கு ஜூலை 25வரை நீதிமன்றக்காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

அந்த 14 பேரில் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர்களும் திருச்சியை சேர்ந்தவரும் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் அவர்களின் முழு விவரங்களை என்.ஐ.ஏ அதிகாரிகள் இதுவரை தெரிவிக்கவில்லை.