தமிழ்நாடு

பசுமை வழிச்சாலைக்காக வனப்பகுதிகளில் களஆய்வு

பசுமை வழிச்சாலைக்காக வனப்பகுதிகளில் களஆய்வு

rajakannan

சென்னை-சேலம் இடையே 8 வழி பசுமை சாலை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்தத் திட்டத்துக்காக நிலங்கள் கையகப்படுத்தப்படும் பணிகள் தற்போது தொடங்கி உள்ளது. விளை நிலங்கள், வனப்பகுதிகள் அழிக்கப்படுவதாக கூறி இந்தத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள், பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இருப்பினும், பசுமை வழிச்சாலை நிச்சயம் வந்தே தீரும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். 

இந்நிலையில், பசுமை வழிச்சாலை திட்டத்தில் வரும் வனப்பகுதிகளில் தமிழக வனத்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளுடன் இணைந்து தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் ஆய்வு மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர். 

மத்திய அரசின் பாரத்மாலா பிரயோஜனா திட்டத்தின் கீழ் 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில், சென்னை - சேலம் இடையே 277.3 கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்தப் பசுமை வழிச்சாலை திட்டம் அமைக்கப்பட உள்ளது. இந்தப் பசுமை வழிச்சாலை, சென்னை அருகேயுள்ள தாம்பரம் முதல் சேலம் நகரம் அரியானூர் வரையில், காஞ்சிபுரத்தில் 59.1 கிமீ, திருவண்ணாமலையில் 123.9 கிமீ, கிருஷ்ணகிரியில் 2 கிமீ, தருமபுரியில் 56 கிமீ, மற்றும் சேலத்தில் 36.3 கிமீ, என இம்மாவட்டங்கள் வழியாக அமைக்கப்பட உள்ளன. இதில், சென்னை முதல் சேலம் வரையில் மொத்தமே 10 கிலோமீட்டர் நீளத்திற்கு குறைவாகவே வனப்பகுதியில் செல்வதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதில் திருவண்ணாமலை மாவட்டத்தில் மட்டும் 6 கிலோமீட்டர் வனப்பகுதி உள்ளது. 

நிலம் கையகப்படுத்தப்படும் இடங்கள்:-

சேலம்                           :     சேர்வராயன் (வடக்கு) - மஞ்சவாடி கேட், பள்ளிப்பட்டி விரிவாக்கம்
                                              சேர்வராயன் (தெற்கு) - ஜாருகுமலை
காஞ்சிபுரம்                   :     செங்கல்பட்டு அருகில் சிறுவாஞ்சூர் வனப்பகுதி
திருவண்ணாமலை   :     செங்ககம் ரேஞ்ச் - ராவந்தவாடி, அன்னந்தவாடி
                                              ஆரணி ரேஞ்ச் - நம்பேடு ,போளூர் ரேஞ்ச் - ஆலியமங்கலம்

தற்போது செங்கம் பகுதியில் உள்ள வனப்பகுதியில் தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் முகாமிட்டுள்ளனர். வனப்பகுதியில் உள்ளே அவர்கள் அடுத்த வாரம் முதல் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். இந்த ஆய்வின் போது வனப்பகுதியில் உள்ள தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் எப்படி பரவி இருக்கிறது என்பது பற்றி குறிப்பு எடுக்க உள்ளார்கள். 

இந்தக் கள ஆய்வு இரண்டு மாதங்கள் வரை தொடரும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். “30 செ.மீ அளவில் தன்னிச்சையாக வளரக்கூடிய ஒரு மரம் இருந்தால் கூட அந்த வழியாக சாலை அமைக்க தேசிய நெடுஞ்சாலைத்துறை தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும்” என்று அதிகாரிகள் கூறுகின்றனர். அதேபோல், திட்டத்தை செயல்படுத்துபவர்கள் வெட்டப்படும் மரங்களுக்கு ஈடாக புதிதாக மரங்களை நடுவதற்காக வனத்துறைக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்பதும் விதியாகும்.