புதிய தலைமுறை செய்தி எதிரொலியாக, திண்டுக்கல் ஆட்சியர் மலையூர் கிராமத்திற்கு ரேஷன் பொருட்களை அனுப்பி வைத்தார்.
திண்டுக்கல் மாவட்டம் லிங்கவாடி ஊராட்சிக்கு உட்பட்ட மலைக் கிராமமான மலையூர், தரையில் இருந்து 2500 அடி உயரத்தில் அமைந்துள்ளது. பள்ளிக்குச் செல்லவோ அத்தியாவசியப் பொருட்கள் வாங்கவோ மறையூர் மக்கள் நான்கு கிலோ மீட்டர் தூரம் மலையில் இருந்து கீழே இறங்கி வர வேண்டிய சூழல் உள்ளது.
இது குறித்து நமது புதிய தலைமுறை தொலைக்காட்சி கடந்த செப்டம்பர் மாதம் மறையூர் மக்களின் கோரிக்கை குறித்த செய்தித் தொகுப்பை ஒளிபரப்பு செய்தது. அதனை பார்த்த திண்டுக்கல் ஆட்சியர் விசாகன், மறையூர் மக்களுக்குத் தேவையான ரேஷன் கடை, பள்ளிக் கட்டடம், பள்ளி செல்லும் மாணவ மாணவிகளுக்காக அரசு பேருந்து வசதி, குடிநீர் வசதி, சாலை வசதி என அனைத்து வசதிகளும் மலையிலேயே எற்படுத்தித் தரப்படும் என உறுதியளித்திருந்தார்.
இந்த நிலையில் மறையூர் கிராமத்திற்கு இந்த மாதத்தில் வழங்குவதற்குத் தேவையான ரேஷன் பொருட்களை திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விசாகன் உத்தரவின் பெயரில் வட்ட வழங்கல் அதிகாரிகள் குதிரை மற்றும் கழுதைகள் உதவியுடன் அரிசி, பருப்பு, எண்ணெய், கோதுமை உள்ளிட்ட பொருட்களை மலைக்கு கொண்டு சென்று உள்ளனர். மேலும் மறையூர் கிராம பள்ளி மாணவ மாணவிகள் பயன்பெறும் வகையில் காலையும் மாலையும் அரசு பேருந்து இயக்கியும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விசாகன் நடவடிக்கை எடுத்துள்ளார்.
பல நூறு ஆண்டுகளாக ரேஷன் பொருட்களை பல கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று வாங்கிய மறையூர் கிராம மக்கள், தங்களது கிராமத்திற்கே ரேஷன் பொருட்கள் கொண்டுவரப்பட்டது கண்டு மகிழ்ச்சி அடைந்ததுடன் இதற்காக நடவடிக்கை எடுத்த திண்டுக்கல் ஆட்சியர் மற்றும் புதிய தலைமுறைக்கு தங்களது நன்றியை தெரிவித்துள்ளனர்.