தமிழ்நாடு

ஒரே ஒரு புத்தாண்டு... தலைவர்களின் விதவிதமான வாழ்த்துகள்

ஒரே ஒரு புத்தாண்டு... தலைவர்களின் விதவிதமான வாழ்த்துகள்

webteam

2018ஆம் ஆண்டு இன்றுடன் நிறைவடைகிறது. நாளை 2019 என்ற புதிய ஆண்டு பிறக்கிறது. இதனை வரவேற்கும் விதமாக உலக மக்கள் அனைவரும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சமூக வலைத்தளங்களில் வாழ்த்துகள் பகிரப்பட்டு வருகின்றனர். உலகில் உள்ள அனைத்து அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக முதலமைச்சர் பழனிசாமி தனது புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். அதில், 2019ஆம் ஆண்டில் வளமும் வலிமையும் மிக்க தமிழ்நாட்டை படைத்திடவும், தமிழகத்தை தொடர்ந்து முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லவும் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட உறுதியேற்போம் என்று முதலமைச்சர் கூறியுள்ளார்.\

2019 எங்கும் இனிமை தரும் எல்லோர்க்கும் இனிய ஆண்டாக அமைய வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துக் கூறியுள்ளார். புத்தாண்டு அனைவருக்கும் மகிழ்ச்சியை தரும் என்று நம்புவதாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி வாழ்த்துத் தெரிவித்துள்ளார். 

2019 அனைவருக்கும் நல்லதை அள்ளித்தரும் ஆண்டாக அமைய இறைவனை வேண்டுவதாக மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தனது வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார். தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள வாழ்த்தறிக்கையில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் விவசாயிகளுக்கு மறுவாழ்வு கிட்டும் ஆண்டாய் 2019 மலரட்டும் எனத் தெரிவித்திருக்கிறார். 

இந்தப் புத்தாண்டிலாவது சாதி, மத, இன, மொழி வேறுபாடற்ற சமுதாயம் மலர்ந்திட வேண்டும் என்று தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் வாழ்த்துக் கூறியுள்ளார். மலர்கின்ற 2019ஆம் ஆண்டு தமிழ்நாட்டு அரசியலிலும் தேசிய அரசியலிலும் வியப்பூட்டும் மகிழ்ச்சியான மாற்றங்களை வழங்கப் போகின்றது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். 

காலம் முன்னிறுத்தும் கடமையினை நிறைவேற்ற புத்தாண்டில் உறுதியேற்போம் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். கடின உழைப்புகள் அத்தனையும் வெற்றிகளை அள்ளித்தந்து நற்பலனை வழங்கிடும் ஆண்டாக 2019 அமையட்டும் என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் வாழ்த்து கூறியுள்ளார். 

வலிமையான தலைமை அமையவும், தேசிய அரசியலில் உறுதித்தன்மை நிலவவும் இப்புத்தாண்டில் உறுதியேற்போம் என்று இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனத் தலைவர் பாரிவேந்தர் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். புத்தாண்டில் லஞ்ச லாவண்யத்திற்கு இடம் கொடுக்க மாட்டோம் என்று தமிழக மக்கள் உறுதி ஏற்க வேண்டும் என்று தமிழ் மாநிலக் காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் தனது வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்