தமிழ்நாடு

45 வயதில் குழந்தை பெற்றதால் ரூ.5 லட்சத்திற்கு விற்ற தம்பதி? விசாரணை தீவிரம்

Rasus

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே 45 வயதில் குழந்தை பெற்றதால் அதனை 5 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்த புகாரின்பேரில் தம்பதியிடம் ‌‌மாவட்ட குழந்தை நல அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள பெரியகல்லுவயலைச் சேர்ந்த காடப்பன் செல்வி தம்பதிக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இவர்களின் மகன் சிங்கப்பூரில் பணிபுரிந்து வருகிறார். செல்விக்கு 45 வயதாகும் நிலையில், இத்தம்பதிக்கு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மற்றொரு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இக்குழந்தையை பிறந்த நான்கு நாட்களிலேயே ஐந்து லட்சம் ரூபாய்க்கு விற்றுவிட்டதாக, தற்போது சைல்ட் லைன் மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்களிடம் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. இதையறிந்து அதிகாரிகள் ‌சென்று விசாரித்தபோது, குழந்தையை தத்து கொடுத்ததாக கூறி‌யுள்ளனர். ஆனால் சுற்றுவட்டாரப் பகுதியில் விசாரணை நடத்தியபோது இத்தம்பதி, 5 லட்சம் ரூபாய்க்கு குழந்தையை விற்றதாக தெரியவந்தது.

இதையடுத்து அங்கு சென்றபோது காடப்பன் தம்பதி வீட்டை பூட்டிவிட்டு தலைமறைவாகினர். இதுதொடர்பாக சைல்டு லைன் மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் திருமயம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்‌த நிலையில், காடப்பன், செல்வி தம்பதி குழந்தையுடன் புதுக்கோட்டை மா‌வட்ட குழந்தை நல அலுவலகத்திற்கு சென்றனர். குழந்தையை தாங்கள் விற்கவில்லை என்றும்‌ தங்களிடமே குழந்தை உள்ளதாகவும் இத்தம்பதி தெரிவித்தனர். ஆயினும் சந்தேகத்தின்பேரில் இத்தம்பதியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.